
நிதி நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்துக்கு, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மூலம் சுமார் ரூ.33,000 கோடி முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு ரகசிய திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை பரபரப்புக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்த நிலையில், கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன், எல்ஐசி மற்றும் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இந்த ரகசிய முதலீட்டு வியூகத்தை வகுத்ததாக அந்த அறிக்கை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, அதானி துறைமுகங்கள் வெளியிட்ட சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை எல்ஐசி முழுமையாக வாங்கியுள்ளது.
எல்ஐசி பாலிசிதாரர்களின் நிதியை, அதிக ஆபத்து என தெரிந்தும் அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க மத்திய அரசு பயன்படுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் குற்றம் சாட்டுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. எல்ஐசியின் முதலீட்டு முடிவுகளில் தங்களுக்கு பங்கில்லை என்றும், அரசியல் சலுகை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் அக்குழுமம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி ஏற்கனவே இதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், தற்போத் வாஷிங்டன் போஸ்ட்டின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva