டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட்... விவசாயிகள் பிரச்சனையிலும் அக்கறை காட்டியிருக்கலாமே... நயினார் விமர்சனம்!
Seithipunal Tamil October 26, 2025 08:48 AM

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார். அப்போது விவசாயிகள் பல நாள்களாக நெல்களை விற்பனை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருவதாகவும், மழையால் நெல்மணிகள் முளைத்து வீணாகிவிட்டதாகவும் குறை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு 6.30 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டதாக கூறினார். இது கடந்த ஆண்டைவிட அதிகமானது என்றாலும், அரசு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளாததால் கொள்முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

செப்டம்பர் மாதமே கொள்முதல் தொடங்க வேண்டிய நிலையில், அரசு அலட்சியமாக நடந்து கொண்டதால் சாக்கு பைகள் தட்டுப்பாடு, போதிய லாரிகள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதனால் பல நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன என்றும் கூறினார்.

அதிகாரிகள் தங்கள் தவறை மறைக்க, தனியார் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.40 வரை வசூலிக்கின்றனர் என்று குற்றம் சாட்டிய அவர், இதற்குப் பொறுப்பு தமிழக அரசும் முதலமைச்சரும் ஏற்க வேண்டும் என்றார்.

மழைப்பொழிவு அளவை முன்கூட்டியே கணிக்க ரூ.10 கோடி மதிப்பில் வாங்கிய நவீன கருவிகள் செயல்பாட்டுக்கு வராததால், மழை தாக்கத்தை அரசு கணிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்த பிறகே நெல் முளை பிரச்சனை குறித்து அரசு விழித்துக் கொண்டதாகவும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்வையிடாதது வருத்தத்துக்குரியது என்றும் கூறினார்.

“டாஸ்மாக்கில் விற்பனை இலக்கு நிர்ணயிக்க அரசு காட்டிய அக்கறையை, விவசாயிகள் பிரச்சனையிலும் காட்டியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது,” என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.