பெரும் நிகோபார் தீவில் மெகா திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றிய அரசு வரைபடத்தில் இருந்த பவளப்பாறைகளை நீக்கி முறைகேடு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரும் நிகோபார் தீவில், சுமார் ரூ.72,000 கோடி மதிப்பில் மெகா உள்கட்டமைப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்த ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தத் திட்டம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இது அப்பகுதியை பெரிய கடல் மற்றும் விமானப் போக்குவரத்து மையமாக மாற்றும் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதுவும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்தத் மெகா திட்டத்தில் ஒன்றிய அரசு முறைகேடு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதாவது; 'பெரும் நிகோபார் தீவின் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கான அரசு வரைபடங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2020 வரைபடத்தில் தெற்கு மற்றும் மேற்கு கடற்கரையோரம், கலாத்தியா விரிகுடாவில் இருந்த பரந்த பவளப்பாறைகள், 2021 வரைபடத்தில் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளன அல்லது உயிரியல் ரீதியாக இருக்கவே முடியாத நடுக்கடலுக்கு மாற்றப்பட்டுள்ளன. துறைமுகம் கட்ட தடை விதிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட மண்டலமாக இருந்த கலாத்தியா விரிகுடா, புதிய வரைபடத்தில் அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது, பெரு நிறுவனங்களின் பேராசைக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைத் தவிர்ப்பதற்கான அதிகாரத்துவ தில்லுமுல்லு' என்று கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, 'இந்தத் திட்டத்தை திட்டமிட்ட விபரீத முயற்சி' என்றும் விமர்சித்துள்ளார்.