UGC
எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.
ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பல பயணிகள் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன என்று கர்னூல் ரேஞ்ச் டிஐஜி ப்ரவீன் கோயா தெரிவித்தார்.
இந்த விபத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமது எக்ஸ் வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.
கர்னூலின் புறநகர்ப்பகுதியான கல்லூர் மண்டல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) இந்த விபத்து நிகழ்ந்தது.
பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள்?
UGC
பேருந்து தீப்பிடித்த போது அதில் 46 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பேருந்தில் பயணித்தோரின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
NCBN/X
பேருந்திலிருந்து உயிருடன் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சூர்யா, பேருந்தின் டீசல் டேங்க் மீது பைக் ஒன்று உராய்ந்ததால் தீப்பற்றியதாக கூறினார்.
காயமடைந்த பயணிகளை கர்னூல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிரி (SIRI) சந்தித்த பிறகு பேசினார். அதன்பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், பேருந்தில் பயணம் செய்த 46 பேரில் 27 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார்.
"இந்த விபத்து அதிகாலை 3 மணி முதல் 3.10 மணிக்கு இடையில் நடைபெற்றுள்ளது. பேருந்து மீது பைக் உராய்ந்ததில் பேருந்திலிருந்து எரிபொருள் கசிந்து, அதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த விபத்துஅதிகாலையில் பேருந்து தீப்பிடித்த போது பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். தீப்பற்றியதை அறிந்த சில பயணிகள் கண்ணாடி ஜன்னலை உடைத்து வெளியேறி உள்ளனர்.
2 மாத மற்றும் 5 வயது குழந்தையுடன் பயணித்த தந்தை ஜன்னலை உடைத்துள்ளார். அவராலேயே பலரும் தப்பியுள்ளனர் என பேருந்தில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர்.
தீவிபத்தால் ஹைட்ராலிக் அமைப்பு எரிந்து சேதமடைந்தது, இதனால் கதவு திறக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது என காவல் துறையினர் கூறியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
மேலும், இதில் உயிர் பிழைத்தவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என காவலர்கள் தெரிவித்தனர் எனவும் பிடிஐ தெரிவித்தது.
பைக்கில் வந்தவருக்கு நடந்தது என்ன?இதனிடையே வெள்ளிக்கிழமை நடந்த பேருந்து தீ விபத்து தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, விபத்தில் சிக்கிய பைக்கின் பின்னால் இருந்தவர் எர்ரிசாமி என்கிற நானி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
பிபிசியிடம் பேசிய கர்னூல் மாவட்ட எஸ்பி விக்ராந்த் பாட்டீல் "எர்ரிசாமியிடம் விசாரணை நடத்தியுள்ளோம். எர்ரிசாமி மற்றும் சிவசங்கர் (பைக்கை ஓட்டி வந்தவர்) இருவரும் நள்ளிரவுக்குப் பிறகு அதிகாலை 2 மணியளவில் லட்சுமிபுரம் கிராமத்திலிருந்து துக்கலி கிராமத்தை நோக்கி புறப்பட்டனர்.
வழியில், அவர்கள் கியா ஷோரூமுக்கு அருகிலுள்ள HP பெட்ரோல் பங்கில் நிறுத்தி, அதிகாலை 2:24 மணியளவில் 300 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினர், அதன் பிறகு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். " என்றார்.
சின்ன தெகுரு அருகே சென்றபோது, சிவசங்கர் கட்டுப்பாட்டை இழந்ததால் பைக், சாலையின் வலது பக்கத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. சிவசங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த எர்ரிசாமி என்கிற நானி, லேசான காயங்களுடன் தப்பினார் எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, விபத்து நடந்த இடத்தில், எர்ரிசாமி, சிவசங்கரின் உடலை சாலையோரமாக இழுத்துச் சென்று பார்த்தபோது, அவருக்கு மூச்சு இல்லாததால் உயிரிழந்ததாக உறுதி செய்து கொண்டார். சாலையில் கிடந்த பைக்கை நகர்த்த முயன்றபோது, ஒரு பேருந்து வந்து பைக் மீது மோதி, சிறிது தூரம் இழுத்துச் சென்றது.
பேருந்தின் அடியில் தீப்பிடித்ததால், எரிசாமி பயந்துபோய் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி, தனது கிராமமான துக்கலிக்குத் திரும்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருவதாவும் மாவட்ட எஸ்பி. கூறியுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு