பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், அப்பள்ளி ஆசிரியர் பாஸ்கர் (53) பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், சனிக்கிழமை பள்ளியில் மாணவிக்கு எதிராக இச்செயலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டுக்கு சென்ற மாணவி இதைத் தனது தாயிடம் தெரிவித்ததும், பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
இதையடுத்து, மாணவியின் குடும்பத்தினர், மற்ற பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. நிலைமை கட்டுக்குள் வர காவல்துறை தலையிட்டது.
போலீஸார் பாஸ்கரை அழைத்து நீண்ட நேரம் விசாரித்தனர். விசாரணையில், அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தது உறுதியாகியதுடன், பாஸ்கரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் பள்ளி தலைமை ஆசிரியைக்கு முன்பே தெரிந்திருந்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் விஜயாவும் கைது செய்யப்பட்டார்.