Getty Images கோப்புப் படம்
தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியத்தில் இருந்து 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, இந்திய கல்வித்துறை அமைச்சக புள்ளிவிவரம் கூறுகிறது.
அதுவே உயர்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இடைநிற்றல் விகிதம் அதிகரித்தற்கு புலம்பெயர் தொழிலாளர்கள், குடும்ப பிரச்னைகள் உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளதாக, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தரவுகளில் பெருமளவு முரண்பாடு உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
இந்திய கல்வித்துறை அமைச்சக புள்ளி விவரம் கூறுவது என்ன?இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறித்த தரவுகளை இந்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
UDISE தமிழ்நாட்டில் 2024-25 கல்வியாண்டில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.
தொடக்கப்பள்ளிகள் (1 முதல் 5 ஆம் வகுப்பு), நடுநிலைப் பள்ளிகள் (6 முதல் 8 ஆம் வகுப்பு) மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் (9 முதல் 10 ஆம் வகுப்பு) ஆகியவை குறித்த விவரங்கள் இதில் இடம்பெறுவது வழக்கம்.
இந்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் வரும் ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (Unified District Information System for Education - UDISE) இணையதளத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டு நிலவரம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் 2.7 சதவீதம். அதுவே, நடுநிலைப் பள்ளிகளில் 2.8 சதவீதமும் உயர் நிலைப்பள்ளிகளில் 8.5 சதவீதமும் இடைநிற்றல் பதிவாகியுள்ளது.
அதற்கு முந்தைய கல்வியாண்டில் (2023-24) தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் என்பது பூஜ்ஜியமாக இருந்தது. உயர்நிலைப்பள்ளிகளில் 7.7 சதவீதம் என்ற அளவில் இடைநிற்றல் இருந்துள்ளது.
UDISE முந்தைய கல்வியாண்டில் (2023-24) தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் என்பது பூஜ்ஜியமாக இருந்துள்ளது
தமிழ்நாட்டில் 37,595 அரசுப் பள்ளிகளும் 7,289 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,929 சுயநிதிப் பள்ளிகளும் 65 மத்திய அரசுப் பள்ளிகளும் செயல்பட்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை கூறுகிறது. இவற்றில் 1,21,22,814 பேர் படித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள், தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
"அந்த வகையில், சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பறைக்குள் வரவில்லை என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்" எனக் கூறுகிறார், மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
கேரளா, ஆந்திராவில் என்ன நிலவரம்?தெலங்கானா மாநிலத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் என்பது பூஜ்ஜியமாக உள்ளது. ஆனால், அம்மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் என்பது 13.2 சதவீதமாக உள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டில் (2023-24) தெலங்கானாவில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் என்பது பூஜ்ஜியமாகவும் உயர்நிலைப்பள்ளிகளில் 11.4 சதவீதமாக பதிவாகியிருந்தது.
கேரளாவில் (2024-25) ஆண்டில் தொடக்கப்பள்ளிகளில் 0.8 சதவீதமாகவும் நடுநிலைப்பள்ளிகளில் 0.4 சதவீதமாகவும் இடைநிற்றல் பதிவாகியுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் இடைநிற்றல் 4.8 சதவீதமாக உள்ளது.
அம்மாநிலத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் என்பது பூஜ்ஜியமாகவும் உயர்நிலைப் பள்ளியில் 3.4 சதவீதமாகவும் இருந்துள்ளது.
ஆந்திராவில் (2024-25) தொடக்கப்பள்ளிகளில் 1.4 சதவீதமும் நடுநிலைப்பள்ளிகளில் 3.7 சதவீதமும் உயர்நிலைப்பள்ளிகளில் 15.5 சதவீதமும் இடைநிற்றல் பதிவாகியுள்ளது.
'இடைநிற்றல்' குறைந்த உத்தரபிரதேசம்யுடைஸ் தரவுகளின்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் என்பது பூஜ்ஜியமாக உள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 3 சதவீதமாகவும் உயர்நிலைப்பள்ளிகளில் 7 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கு முந்தைய கல்வியாண்டில் (2023-24) உத்தரபிரதேசத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1.7 சதவீதம், நடுநிலைப்பள்ளிகளில் 3.9 சதவீதம், உயர்நிலைப்பள்ளிகளில் 8.7 சதவீதம் இடைநிற்றல் பதிவாகியிருந்தது.
குஜராத் மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகளில் இடைநிற்றல் 0.2 சதவீதமாக உள்ளது. நடுநிலைப்பள்ளிகளில் 5.8 சதவீதமாகவும் உயர்நிலைப்பள்ளிகளில் 16.9 சதவீதமாகவும் உள்ளது.
"பள்ளிக்கல்வித் துறை விளக்க வேண்டும்"
Prince Gajendrababu புலம்பெயர் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு
தமிழ்நாட்டில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதற்கு சில காரணங்களை முன்வைக்கிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
"மாணவர்களுக்குப் படிப்பதற்கான ஆர்வத்தை எந்தளவுக்கு வளர்த்தெடுத்துள்ளோம் என்பது முக்கியமானது. முதல் வகுப்பு தொடங்கி பள்ளிப் படிப்பு முடியும் வரை உடல் நலம் முதல் மனநலம் வரை அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"எண்ணும் எழுத்தும் மட்டும் கல்வி அல்ல. அவர்களின் சமூக பொருளாதார சூழல்கள் மிக முக்கியமானவை. இடைநிற்றலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டார்களா அல்லது புலம்பெயர் குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்பட்டதா என்பதை அரசு விளக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தில் பெற்றோரிடையே நிலவும் பிரச்னைகள், அவர்களின் சமூக, பொருளாதார சூழல்கள் காரணமாகவும் இடைநிற்றல் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
Jayaprakash Gandhi புள்ளிவிவரத்தின் தன்மை குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. தினசரி 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்களை சிறு வயதிலேயே பணம் சம்பாதிக்க ஊக்குவிக்கும் வேலைகளும் நடக்கின்றன. இதுதவிர, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல்கள் உள்ளன. ஆகவே, புள்ளிவிவரம் பற்றி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க வேண்டும்." என்றார்.
ஆசிரியர் சங்கங்கள் கூறுவது என்ன?
Das பெண் குழந்தைகளுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்கிறார் தாஸ்
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்கும்போது எமிஸ் தளத்தில் (Education Management Information System) பதிவு செய்யப்படுகிறது. பிளஸ் 2 முடிக்கும் வரையில் இது பராமரிக்கப்படுகிறது. பிறகு உயர்கல்வியில் அவர்கள் இணைந்துள்ளதை உறுதி செய்வதற்கு உமிஸ் (UMIS) தளத்தில் பதிவேற்றப்படுகிறது.
"ஒரு பள்ளியில் இருந்து இடம்மாறி வேறு பள்ளியில் மாணவர் சேர்ந்தால் அது முறையாக எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்படுகிறது. இடம்பெயரும் மாணவர் விவரங்களைப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படும்போது இடைநிற்றல் கணக்குகளில் சேர்ந்துவிடுகிறது," எனக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு அருகில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் தங்கவைக்கப்படுவதாகக் கூறும் அவர், "அருகில் உள்ள பள்ளிகளில் அவர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். ஆனால், இவற்றில் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது." என்கிறார்.
அவர்களில் பலரும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கத் தவறுவதாகக் கூறும் தாஸ், "நடப்பு கல்வியாண்டில் மூன்றுக்கும் மேற்பட்ட ஒடிஷா மாநில குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்த்தோம்." என்கிறார். இவர் திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
பெற்றோரின் நேரடி கண்காணிப்பின்மை, பெற்றோர் ஆதரவு இல்லாதது, ஆதரவற்ற குழந்தைகள், தொழிலுக்காக பெற்றோர் இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாகவும் தாஸ் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை விளக்கம்பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவர், "மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் யுடைஸ் தளத்தில் மாணவர் சேர்க்கையின்போது ஆதார் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும். ஆனால், எமிஸ் செயலியில் அப்படியில்லை. சேர்க்கை நடந்தாலே பதிவு செய்யப்பட்டுவிடும். அந்தவகையில் இடைநிற்றல் தொடர்பாக வெளியான விவரங்களை முழுமையாக ஆய்வு செய்தால் உண்மை நிலவரம் தெரியவரும்." என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், "தமிழ்நாட்டில் யுடைஸ் மற்றும் எமிஸ் என இரண்டு வகையாக மாணவர் சேர்க்கை பதிவுகள் நடைமுறையில் இருக்கின்றன. இரண்டில் ஒன்று மட்டும் பெறப்பட்டால் சரியான விவரம் வெளியில் வரும். யுடைஸ் கூறியுள்ளதைப் போல இடைநிற்றல் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை" என்கிறார்.
அதாவது, மாநில அரசின் எமிஸ் செயலியில் ஆதார் இல்லாத மாணவர்களின் சேர்க்கையும் பதிவாகும் போது, மத்திய அரசின் யுடைஸ் தளத்தில் ஆதார் கட்டாயம் என்பதால் அந்த மாணவர்களின் சேர்க்கை பதிவாகாது. இதனால், யுடைஸ் அடிப்படையில் பார்க்கையில், தமிழ்நாட்டில் மாணவர் இடைநிற்றல் அதிகம் இருப்பது போன்ற தோற்றம் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கு ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறும் கண்ணப்பன், "காலை உணவுத் திட்டம் மூலம் இடைநிற்றல் குறைந்து வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக் குழு அறிக்கை கூறுகிறது." என்றார்.
"தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் என்பது வெகுவாக குறைந்துவிட்டது. மாணவர் சேர்க்கை தொடர்பாக தரவுகளைப் பதிவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது உள்பட சில காரணங்கள் இருக்கலாம்." எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் குறிப்பிட்டார்.
இடைநிற்றலுக்கு தீர்வு என்ன?இடைநிற்றலுக்கான தீர்வு பற்றி குழந்தைகள் நல செயற்பாட்டாளர் அ.தேவநேயன் பேசுகையில், "தமிழ்நாட்டில் 95 சதவீதத்துக்கு மேற்பட்ட பிரசவங்கள், மருத்துவமனைகளில் நடக்கின்றன. குழந்தை பிறந்த உடன் அதற்கு டிராக்கிங் (Tracking) எண் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவது, அங்கன்வாடியில் சேர்ப்பது முதல் உயர்கல்வி வரை அனைத்தையும் இதன்மூலம் கண்காணிக்க முடியும். அப்போது தான் இடைநிற்றலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்." என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாகக் கூறும் அவர், "அந்த வகையில் பிறப்பு முதல் உயர்கல்வி வரை குழந்தைகளைக் கண்காணிப்பதில் அரசுக்கு எந்தவித சிரமமும் இருக்கப் போவதில்லை" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு