ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள பல்லப்கர் பகுதியில், 14 வயது மகளை கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ ஆலோசனைக்குச் சென்றபோது, இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது பற்றி போலீசார் தெரிவித்ததாவது: ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்த 42 வயதான நபர், தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, வீட்டில் தங்கியிருந்த தனது 14 வயது மகளை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி 7-ஆம் வகுப்பு மாணவி. அவரது தாய், கணவனின் மது போதையால் ஏற்பட்ட அடிக்கடி சண்டைகள் மற்றும் வன்முறையால் தனது ஆறு குழந்தைகளில் இருவரை அழைத்துக்கொண்டு தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து சிறுமி தந்தை மற்றும் தம்பிகளுடன் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை, சிறுமி உடல்நிலை சரியில்லாமல், வயிற்று வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் அக்கம் பக்கத்து பெண் ஒருவர் அவரை மருத்துவ ஆலோசனைக்குக் கொண்டு சென்றபோது, சிறுமி அனுபவித்த கொடுமையை வெளிப்படுத்தினார். கடந்த “செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் துஷ்பிரயோகம் நடந்தது,” என்று சிறுமி அப்பெண்ணிடம் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
அந்தப் பெண் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததால், புலனாய்வு குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை தொடங்கியது. விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட தந்தை தினமும் குடிபோதையில் வீடு திரும்பி, கடந்த இரண்டு மாதங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. மனைவி பிரிந்துவிட்ட கோபத்தில், அவர் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் “பாலியல் வன்கொடுமை” வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார் என ஃபரிதாபாத் காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்பால் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நபரின் மற்ற மூன்று சிறுமகள்களும் இதேபோன்று துன்புறுத்தலுக்குள்ளானார்களா என்பதை அறிய, போலீசார் ஆலோசகர்களின் உதவியுடன் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் ஃபரிதாபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு பாதுகாப்பு மையத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் உளவியல் ஆலோசனை பெற்று வருகிறார்.