பீகார் மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் மொத்த நாடும் தேர்தலை உற்று நோக்கி வருகிறார்கள்.
பீகார் அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி, தேஜஸ்வியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸின் இன்டியா கூட்டணி, பிரசாந்த் கிசோரின் ஜன்சுராஜ் கட்சி 3 முனை போட்டி நிலவுகிறது. இன்டியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய தலைவர்கள் தொடங்கி மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டுள்ளனர். இன்டியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமித்ஷா ஒரே நாளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
பொதுக் கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், மத்திய பாஜக அரசும், மோடியும் குஜராத்திற்கு ஒதுக்கியதில் 1 சதவீதம் கூட பீகாருக்கு ஒதுக்கவில்லை. பீகாரை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள். எங்கள் ஆட்சி பதவியேற்ற பிறகு பீகாரை நாட்டின் நம்பர் 1 மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு நம் மாநிலத்தை நோக்கி நிறைய முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.
கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எங்களின் இன்டியா கூட்டணி வேலை வாய்ப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுகிறது. மேலும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டுள்ளோம்.
பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும். அடுத்த 20 மாதங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களின் வேதனைகளை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.