டெல்லியில் கல்லூரி மாணவியிடம் மூன்று வாலிபர்கள் நடுரோட்டில் திராவகம் (ஆசிட் ) வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதால், அவர் வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்கள் அந்த மாணவியை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர். இதனால் மாணவி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து விலகிச் செல்ல முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவர் திடீரென தன் வசம் வைத்திருந்த திராவகத்தை மாணவியின் முகத்தை நோக்கி வீசினார்.
அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முகத்தை கைகளால் மறைத்ததால், திராவகம் கைகளில் விழுந்து வெந்து கருகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வலியால் துடித்த மாணவி சாலையில் சரிந்தார். அதற்குள் குற்றவாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
படுகாயம் அடைந்த மாணவியை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆரம்ப விசாரணையில், அதே கல்லூரியில் படிக்கும் ஜிதேந்தர் என்ற இளைஞர்தான் திராவகத்தை வீசியது தெரியவந்தது.
ஜிதேந்தர் கடந்த ஏழு மாதங்களாக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி அதை நிராகரித்ததால், ஆத்திரமடைந்த ஜிதேந்தர் தனது நண்பர்கள் அர்மான் மற்றும் இஷானுடன் சேர்ந்து இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.