சென்னை, அக்டோபர் 27: மோன்தா புயல் கரையை கடக்க உள்ளதாக கூறப்படும் நாளை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நேற்று நள்ளிரவு மோன்தா புயல் உருவான நிலையில், தற்போது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 550 கி.மீ தொலைவில், கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை (அக்.28) அன்று இது தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா கடலோர பகுதிகள் மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே நாளை இரவு கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also read: வட சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை.. வெதர்மேன் சொன்ன முக்கிய அலர்ட்!
அதேசமயம், புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி முன்பே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, நெல்லூர் உள்ளிட்ட கடற்கரைகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. ஆந்திராவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றமாக உள்ளது.
அதேபோல், வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் இரவு மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் வரை, வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also read: தமிழக்தில் சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இதனிடையே, மோன்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.