மகளிர் உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
இதில் கடந்த 25ம் தேதி மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற போட்டிக்காக ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர்.
ஓட்டலில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளில் 2 பேர் அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றுள்ளனர்.
Australian Women's Team
அப்போது, அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த நபர் வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
"மைதானம் அல்லது ஓட்டலை விட்டு வெளியே செல்லும்போது வீராங்கனைகள் பாதுகாவலர்கள் அல்லது நிர்வாக அதிகாரிகளிடம் கூறிவிட்டுதான் செல்ல வேண்டும்.
ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஏன் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார்கள். பயிற்சியாளரிடம் கூட சொல்லாமல் சென்றிருக்கின்றனர்.
அவர்கள் பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்-வீராங்கனைகளுக்கு இங்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
Australia Women's Team
இங்கிலாந்தில் கால்பந்தை போன்று இந்தியாவில் கிரிக்கெட். கால்பந்து வீரர்களின் உடைகள் கிழிக்கப்படுவதை நான் பார்த்துள்ளேன்.
வீராங்கனைகளுக்கு நடந்த இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடம். நமக்கு மட்டுமின்றி வீராங்கனைகளுக்கும் ஒரு பாடம்" என்று பேசியிருக்கிறார்.
பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.