கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது: “தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்காக மதுபாட்டில்களை பாதுகாப்பாக களஞ்சியங்களில் அடுக்கி வைத்துள்ளது. ஆனால் விவசாயிகள் உழைத்து விளைவித்த நெல்லை அரசு வாங்காமல், சாலையோரத்தில் கொட்டி விட்டு அவதிப்பட வைக்கிறது.
தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை எடுத்துக் கொள்ளாமல், அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து நெல் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை மதிக்காததையும், அவர்களின் உழைப்பை அவமதிப்பதையும் காட்டுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். அப்போது அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்றதா? அந்த உயிர்களுக்கு நீதி கிடைத்ததா? என அவர் கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், “ஒரு நடிகரைச் சந்திக்கச் சென்றவர் தவறுதலாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்துக்கு 35 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் உழைத்து நாட்டின் உணவு பாதுகாப்புக்கு பங்களித்த விவசாயிகள் சாலையில் நெல் கொட்டி அழும் நிலையில் இருக்க, அவர்களுக்காக அரசு ஒரு சொல் கூட பேசவில்லை,” என சீமான் கடும் விமர்சனம் செய்தார்.
தமிழக அரசு விவசாயிகளை புறக்கணித்து, வருமானம் தரும் துறைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என அவர் குற்றம்சாட்டினார். “விவசாயிகள் உயிர் தியாகம் செய்தாலும், அவர்களுக்கு நியாயம் கிடைக்காத நிலையை மக்கள் சிந்திக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.