பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பெயரை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சமீபத்தில் நடந்த 'ஜாய் போரம் - 2025' என்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் சக நடிகர்களான ஷாருக் கான் மற்றும் அமீர் கானுடன் பங்கேற்றார். அப்போது மேற்காசியாவில் இந்திய சினிமாவின் செல்வாக்கு குறித்து பேசும்போது, அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளன.
அந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் பேசியதாவது: ''நீங்கள் ஒரு ஹிந்தி திரைப்படம் எடுத்து சவுதி அரேபியாவில் வெளியிட்டால், அது சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால், அது பல நுாறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனென்றால், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு, பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்; ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்; பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர், அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்,'' என பேசியிருந்தார்.

ஆனால், பாகிஸ்தான், பலுசிஸ்தானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதுகின்ற நிலையில், சல்மான் கான் பேசுகையில் பலுசிஸ்தானை ஒரு தனி நாடு போல் குறிப்பிட்டது பிரிவினைவாதத்தை ஆதரிப்பது போல உள்ளது என பலரும் விமர்சித்துள்ளனர். இதையடுத்து, பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் உள்ள நான்காவது அட்டவணையில், சல்மான் கானின் பெயரை சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அட்டவணை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டவணையில் ஒருவர் சேர்க்கப்பட்டால், கடும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகிறது. ஆனாலும், இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.