கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்தே எந்த அரசும் விவசாயிகளை மதிப்பதில்லை - திமுகவை கடுமையாக சாடிய சீமான்..!!
Top Tamil News October 27, 2025 09:48 PM

கோவையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:

ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரில், நெல் சேகரித்து, அதை பாதுகாக்க கிடங்கு இல்லாதது வருத்தத்திற்கு உரியது. டாஸ்மாக் மது பானங்களை பத்திரமாக பாதுகாக்க, பெரிய பெரிய கட்டடம் கட்டி, அதில் குளிரூட்டி, கண்காணிப்பு கருவி நிறுவி, காவலர்களை போட்டு, தி.மு.க., அரசு பாதுகாக்கிறது. ஆனால், உழைக்கும் விவசாயிகள், உயிரைக் கொடுத்து விளைவிக்கும் உணவுப் பொருளை, தெருவில் கொட்டி மழையில் நனையவிடும் அவலம் உள்ளது. மக்களுக்கு சேவை செய்யாதவர்களின் கையில் அதிகாரம் இருந்தால், மக்கள் நலன் என்பது கனவாகத்தான் இருக்கும்.

மனசாட்சி இருந்தால் நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவார்களா? இதுதான் சாதனையா? ஒரு நாள் பட்டினி கிடந்து சாகும்போது, அதன் அருமை தெரியும். தமிழகத்தில், நெல், கரும்பு இருக்கும்போது, அரிசியையும், வெல்லத்தையும் வெளி மாநிலங்களில் இருந்து ஏன் வாங்க வேண்டும். கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்தே எந்த அரசும், விவசாயிகளை மதிப்பதில்லை. நெல் சேமிப்பு கிடங்குகளையும் கட்டவில்லை.

மக்களின் உயிரை பறிக்கும் சாராயத்தை பாதுகாக்கும் அரசு, உயிரை பாதுகாக்கும் உணவான நெல்லை பாதுகாக்கவில்லை. தமிழகத்தை, தி.மு.க.விடம் இருந்து காப்பாற்றினாலே போதும்.

இவ்வாறு, சீமான் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.