IMD இன்று தீவிர புயலாக மோன்தா வலுப்பெறும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயல் மேலும் வலுப்பெற்று இன்று தீவிர புயலாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யலாம். மேலும், இப்புயல் ஆந்திராவில் இன்று கரையைக் கடப்பதால், ஆந்திரா, ஒடிசா, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
"மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான மோன்தா புயலானது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்காக நகர்ந்தது. இந்தப் புயல் இன்று (அக்டோபர் 28) இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் ஆந்திராவின் மச்சிலிபட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்காக நகர்ந்து இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறும்.
தொடர்ந்து அதே திசையில் நகரும் இப்புயல் மாலை அல்லது இரவு ஆந்திராவில் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டணம் மற்றும் கலிங்கபட்டணம் இடையே கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 90–100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அது மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலும் வேகமடையலாம்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
IMD இன்று தீவிர புயலாக மோன்தா வலுப்பெறும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து) தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கைப்படி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு விவரம்மோந்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28/10/2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கைமோன்தா புயல் எதிரொலியாக, தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இரு துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 29-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டலாம்.
ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் அக்டோபர் 29-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IMD மோன்தா புயலின் பாதையை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது) ஆந்திராவில் என்ன நிலை?
மோன்தா புயல் இன்று ஆந்திராவில் கரையைக் கடப்பதால் அங்கு சூறாவளிக் காற்றுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 17 கடலோர மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய அதிகனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆந்திரா, ஏனாம் மற்றும் ராயலசீமா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசுமென்றும், அது மணிக்கு 80 கிலோமீட்டர் வரை வேகமடையும் என்றும் வானிலை ஆயுவு மையம் எச்சரிக்கிறது. இதே புயல் இன்றே மணிக்கு 90-100 கிலோமீட்டர் வேகத்தை அடையலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒருசில மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும், கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.