S.I.R. : "தமிழ்நாடு மிக வலிமையாக இதை எதிர்க்க வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி
Vikatan October 28, 2025 11:48 PM

மதுரையில் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை மாற்றி அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகளுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.

சு.வெங்கடேசன்

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையமாக மாற்றுவதற்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளோம். இன்றைய கூட்டத்தில் மிக முக்கியமாக கூடல் நகர் ரயில் நிலையத்திற்காக குறிப்பாக பயணிகள் வந்து செல்வதற்கான வசதிகள் சொல்வதில் மூன்று துறையின் ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. ரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறை, மற்றும் மதுரை மாநகராட்சி அதற்கான இரண்டு கூட்டங்கள் நடத்தி தற்போது அதை முறைப்படுத்தி இருக்கின்றோம்,

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (S.I.R) 12 மாநிலங்களில் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாக்காளர் இணைப்பு, சேர்ப்பு என்பது தேர்தல் ஜனநாயக முறையில் இதயம் போன்றது. ஆனால் இன்று தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி இதயத்தை அரிக்கின்ற ஒரு செயல்.

தேர்தல்

ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயல் இது, தமிழ்நாடு மிக வலிமையாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பீகாரில் மூன்று லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையத்தை தங்களது கை பொம்மையாக இயக்குவதற்கு இவர்கள் ஏற்பாடு  செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பாஜக வரவேற்கிறது, பாஜகவின் நடவடிக்கையை அதிமுக வரவேற்கிறது இவ்வாறு இவர்கள் மூவரும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறார்கள். அதிமுக இன்று இருக்கும் நாளை இல்லாமல் இருக்கும். ஆனால், நமக்கு பிரச்னை அதுவல்ல, அனைத்துக் கட்சிகளும் விழிப்போடு இருந்து தடுக்கு வேண்டியது நம் கடமை.

ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது, ஓட்டைகளை அடைப்பது தான் கடமை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கைவிடப்பட வேண்டும், தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்குவது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் முறையை சிதைப்பது போல, இதயம் போன்ற தேர்தல் முறையை அழிக்க முயற்சி நடக்கிறது.

சு.வெங்கடேசன்

ஜனநாயகத்தில் தேர்தல் எனும் இதயத்தை அரிக்கிற செயல். தேர்தல் ஆணையம் கட்சிகளின் எந்தக்கேள்விக்கும் முறையாக பதில் அளிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். பீகாரில் 3 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆரில் வாக்குகள் நீக்கப்படுவது கண்கூடாகத் தெரியும். குறிப்பிட்ட சமூக மக்களின் வாக்குகளை நீக்கும் வகையில் நடவடிக்கை.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு தேர்தல் ஆணையம் ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை கைப்பொம்மையாக ஒன்றிய அரசு பயன்படுத்த உள்ளது. பாஜகவின் அரசியல் நலனுக்கு எதுவெல்லாம் வாய்ப்போ அதையெல்லாம் தேர்தல் ஆணையம் செய்கிறார்கள்.

பாஜக வரவேற்றதால் வரவேற்கும் அதிமுகவின் நோக்கம் மக்கள் நோக்கமல்ல. ஜனநாயக அடிப்படையான தேர்தல் முறை காப்பாற்ற வேண்டும். தேர்தல் ஜனநாயகத்தில் சிதைவை ஏற்படுத்தக்கூடாது. நாங்கள் விழிப்போடு இருப்போம். தேர்தல் ஆணையம் தேர்தல் ஜனநாயக முறையில் பெருச்சாளிகள் நுழைய ஓட்டை ஏற்படுத்தக்கூடாது" என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.