சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரவிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மற்றும் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் தொடர்பாக இந்தக் கூட்டம் நடைபெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மாநிலம் முழுவதும் விரைவில் தொடங்க உள்ள திருத்தப்பணிகளை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக பங்கேற்று கண்காணிக்க வேண்டும் என பழனிசாமி அறிவுறுத்தினார்.
நவம்பர் 4ஆம் தேதி தொடங்க உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் (பூத்) கட்சியின் பொறுப்பாளர்கள் நேரடியாக பங்கேற்று செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், ஐடி பிரிவு மற்றும் மாவட்ட நிலை நிர்வாகிகள் ஒன்றிணைந்து தகவல் பரிமாற்றத்தை விரைவாக மேற்கொண்டு, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணிகள் தொடர்பான நிலவரங்களை தலைமையகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என பழனிசாமி உத்தரவிட்டார்.