உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Seithipunal Tamil November 03, 2025 11:48 AM

நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி 87 ரன்கள் அடித்தார். துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும், தீப்தி சர்மா 58 ரன்களும் சேர்த்தனர். 

50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்தது. இந்த ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா ஒரு முக்கிய சாதனையை பதிவு செய்தார். முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் உலகக் கோப்பை சாதனையை அவர் முறியடித்தார். மிதாலி ராஜ் 2017 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் 409 ரன்கள் எடுத்திருந்தார். இம்முறை மந்தனா 21 ரன்கள் எடுத்ததன் மூலம் அந்த சாதனையை கடந்தார்.

நடப்பு உலகக் கோப்பையில் மந்தனா 9 இன்னிங்ஸில் மொத்தம் 410 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனையாக புதிய பதிவை அமைத்துள்ளார்.

இந்த தொடரில் மந்தனாவின் நிலைத்த ஆட்டம் இந்திய அணிக்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் அவரது பங்களிப்பு இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற உதவியதாக விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.

இந்தியா 299 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி தற்போது வரை 25.2 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு,  129 ரன்கள் எடுத்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.