அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் தற்போதைய நிலை குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “கடந்த ஆறு மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கைகளை நாங்கள் கவனித்து வருகிறோம். அத்திக்கடவு–அவிநாசி திட்டம் நிறைவடைந்ததை ஒட்டி நடந்த பாராட்டு விழாவில் நான் பங்கேற்றேன். ஆனால், கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இல்லையென காரணம் கூறி செங்கோட்டையன் விழாவில் பங்கேற்க மறுத்தார். விழா கட்சி சார்பற்றது என்பதால், தலைவர்களின் படங்கள் இடம்பெறாது என ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்தபோதும், அதை அவர் ஏற்கவில்லை.

ஆனால், அதே செங்கோட்டையன் தனது தொகுதியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கிருந்த பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாமல், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படங்கள் மட்டும் இருந்தன. அப்போதே அவர் திமுகவின் பி-டீம் வேலையை தொடங்கிவிட்டார்.
செங்கோட்டையன் கூறும் ‘கட்சியில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்’ என்ற கருத்து தவறு. அவருடன் இருப்பவர்கள் பிரிந்தவர்கள் அல்ல, நீக்கப்பட்டவர்கள். ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, அவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது என பொதுக்குழுவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். அதிமுக சட்ட விதிகளின்படி அந்த தீர்மானம் நடைமுறையில் உள்ளது. கட்சிக்கு எதிராக நடந்தால் இதுதான் கதி; இது நான் எடுத்த தனி முடிவு அல்ல” என்றார்.

மேலும் பேசிய அவர், “செங்கோட்டையன் தன்னை ‘அம்மா விசுவாசி’ என கூறிக் கொண்டே ஜெயலலிதா அவரை அமைச்சரிலிருந்து நீக்கியதை மறக்கக் கூடாது. அதேபோல டி.டி.வி. தினகரனையும் ஜெயலலிதா அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருந்தார். அப்போது தினகரன் சென்னைக்கு வரவேயில்லை.
அவ்வப்போது பச்சோந்தி போல நிறம் மாறும் நபர்கள் அதிமுக பற்றி பேசத் தகுதியற்றவர்கள். செங்கோட்டையன் சட்டப்பேரவையிலும், பொதுக்கூட்டங்களிலும் ஒருபோதும் திமுகவை எதிர்த்து பேசியதில்லை. அவர் திமுகவின் பி-டீம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
அதிமுக என்பது இரண்டரை கோடி தொண்டர்களின் இயக்கம். இதை பலவீனப்படுத்த யாரும் முடியாது. கட்சிக்கு எதிராக யாராவது செயல்பட்டால், தலைமை அதை வேடிக்கைப் பார்க்காது,” என எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?