ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த இந்தியா 2 வாரங்களில் சாம்பியன் - 3 காரணங்கள் இதுவா?
BBC Tamil November 04, 2025 05:48 AM
Getty Images

அக்டோபர் 19, 2025, ஞாயிற்றுக்கிழமை - பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.

251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.

ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 10 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, இந்திய பேட்டர்கள் இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் தோல்வியே மிஞ்சியது.

பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியா சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது.

Getty Images முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா

ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இந்த ஞாயிறு இந்தியாவுக்கானதாக மலர்ந்தது. அன்று தொடர் தோல்விகளைச் சந்தித்த அதே அணி, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.

மூன்று தொடர் தோல்விகளுக்கும் வெற்றிக்கும் இடையிலான இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அந்தத் தோல்விகளில் இருந்து இந்தியா மீண்டு வந்தது எப்படியென்று, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

பொறுப்பெடுத்துக்கொண்ட சீனியர்கள்

இந்திய அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக ஆர்த்தி சங்கரன் சொல்வது, ''இந்திய சீனியர் வீராங்கனைகள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான்''

"அந்தத் தோல்விகளுக்குப் பின் சீனியர் வீராங்கனைகள் தங்கள் கைகளில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார் அவர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 60 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, 88 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 4 ரன்களில் தோல்வியடைந்தது இந்தியா.

Getty Images சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்

இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி மந்தனா, "எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம். அந்த சரிவு என்னிடம் இருந்து தொடங்கியதால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டத்தை இறுதி வரையிலும் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

இப்படி ஒரு முன்னணி வீராங்கனை பொறுப்பை தன் மீது எடுத்துக்கொண்டது திருப்புமுனை ஏற்படுத்திய விஷயம் என்கிறார் ஆர்த்தி.

இந்த அணுகுமுறையை கடைசி இரண்டு போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் பேட்டிங்கிலுமே பார்க்க முடிந்தது. களமிறங்கியதும் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்டு, மெல்ல தன் ஆட்டத்துக்குள் செல்பவர் தீப்தி ஷர்மா. அதுதான் அவரது அணுகுமுறை. ஆனால், அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் வேறொரு அணுகுமுறையை அவரிடம் பார்க்க முடிந்தது.

அரையிறுதியில் 338 ரன்களை இந்திய அணி சேஸ் செய்ததால், செட்டில் ஆக தீப்தி ஒரு பந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததில் இருந்தே அதிரடி காட்டியவர், 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே டாட் பால்கள்தான் ஆடினார். கடினமான சிங்கிள்களைத் தவிர்க்கும் அவர், ரிஸ்க் எடுத்து ஓடி ரன் அவுட்டும் ஆனார்.

Getty Images நாக் அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் தீப்தியின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது

இறுதிப் போட்டியில் கூட தீப்தி அதைத்தான் செய்தார். "ஷஃபாலி, ஜெமி இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு, ஹர்மனும் மெதுவாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் ரன் ரேட் பெரிய அடி வாங்கியிருக்கும். ஆனால், அப்படி ஏற்படாமல் தீப்திதான் பார்த்துக்கொண்டார். இல்லையெனில் இந்தியா அந்த கட்டத்தில் பின் தங்கியிருந்திருக்கும்" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

இறுதிப் போட்டியில் தீப்தி 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வெளியேறிய பிறகும் இந்தியாவின் ரன் ரேட் சீராக இருந்ததற்கு முக்கியக் காரணமாக விளங்கியிருந்தார் தீப்தி.

சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதை முக்கியக் காரணமாகக் கூறும் ஆர்த்தி சங்கரன், சில டெக்னிக்கலான காரணங்களையும் குறிப்பிட்டார்.

சரியான காம்பினேஷனும், மாறிய பேட்டிங் ஆர்டரும்

"காம்பினேஷனை சரியாகக் கண்டறிந்து, ஆறாவது பௌலரை சேர்த்தது இந்த மாற்றத்துக்கான முக்கியமான விஷயம். அது ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்குத் தேவைப்பட்டது" என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே அணியில் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாததற்கும் அது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்தது இந்திய அணி. அடுத்த போட்டிகளில் 6 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதுபோல் அணியை மாற்றினார்கள்.

அதேபோல், பேட்டிங் ஆர்டரையும் ஒரேபோல் வைத்திருக்காமல் மாற்றியதும் முக்கியக் காரணம் என்றும், குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸை நம்பர் 3 இடத்தில் ஆடவைத்ததும் இந்த மாற்றத்துக்கான ஒரு முக்கியம் என்றும் ஆர்த்தி சங்கரன் குறிப்பிட்டார்.

Getty Images ஜெமிமா நம்பர் 3 பொசிஷனில் களமிறங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

வழக்கமாக ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு வந்த ஜெமிமாவை, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே அமர்த்தியது இந்திய நிர்வாகம்.

ஆனால், அடுத்த போட்டியிலேயே அவரை அணிக்குக் கொண்டு வந்ததோடு, மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார்கள். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் ஜெமிமா.

அதற்கு முன் ஆடிய 55 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்தார் ஜெமிமா.

அந்த நியூசிலாந்து போட்டியில் கூட அவர் முதலில் ஐந்தாவது இடத்தில் தான் ஆடுவதாக இருந்தது. ஓப்பனர்கள் 33 ஓவர்கள் ஆடிவிட்டதால் அவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார்கள்.

அதேபோல் அரையிறுதியில் கூட களமிறங்குவதற்கு 10 நிமிடம் முன்புதான்தான் அந்த இடத்தில் விளையாடப்போவது பற்றி அணி நிர்வாகம் கூறியதாகச் சொல்லியிருந்தார் ஜெமிமா.

அந்த மாற்றம் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக் காரணமாக அமைந்தது.

இப்படி முன்கூட்டியே செய்திருந்த பேட்டிங் ஆர்டர் திட்டங்களை மாற்றியது சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார் ஆர்த்தி சங்கரன்.

ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி

அந்தத் தோல்விகளுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்ஸியிலும் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாகக் குறிப்பிட்டார் ஆர்த்தி. குறிப்பாக ஃபீல்ட் செட் அப் பல தருணங்களில் மிகவும் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.

"சமீபத்திய போட்டிகளில் இந்தியா ஃபீல்டிங் செய்தபோது பௌண்டரிகள் தடுக்கப்பட்ட விகிதம் அதிகரித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஃபீல்டிங் திறன் சிறப்பாக இருந்ததோடு, சரியான இடங்களில் சரியான ஃபீல்டர்களை நிற்க வைத்ததும் இதில் முக்கியக் காரணம்" என்றார் ஆர்த்தி.

இறுதிப் போட்டியில் கூட இதைப் பார்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் வீழ்ந்ததே இப்படி நல்ல ஃபீல்டிங் செட் அப் மற்றும் துல்லியமான ஃபீல்டிங்கால்தான்.

Getty Images ஃபீல்டிங்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறுகிறார் ஆர்த்தி சங்கரன்

அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் கவர் திசையில் அடித்துவிட்டு ஓட முயற்சி செய்தார். ஆனால், சிறப்பாக ஃபீல்டிங் செய்து ரன் ஓட விடாமல் ஜெமிமா தடுத்தார்.

அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு பிரிட்ஸ் ரன் எடுக்க முயற்சி செய்ய, டைரக்ட் ஹிட் மூலம் அவரை அவுட்டாக்கினார் அமஞ்சோத் கவுர்.

இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபீல்டர்களை முக்கியமான அந்த இடங்களில் நிறுத்தி வைத்திருந்ததும், அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டதும்தான் விக்கெட் கணக்கை தொடங்கிவைத்தது.

அதுமட்டுமல்ல, ஜாஃப்தா அவுட்டானபோது, அந்த கேட்சைப் பிடித்த ராதா யாதவ் ஷார்ட் மிட் ஆன் பொசிஷனில் வழக்கத்தைவிட மிகவும் நேராக நின்றிருந்தார்.

அதுபோக, பிரிட்ஸுக்கு 'சில்லி மிட் ஆன்' ஃபீல்டர் கூட (அங்கும் ஜெமிமா) வைத்திருந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இப்படியான ஃபீல்ட் பொசிஷன்கள் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தின.

ஆனால், இதற்கு முன்பாக இதே ஃபீல்டிங் செட் அப் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன், இந்தியாவின் ஃபீல்டிங் செட் அப் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அது அந்தத் தோல்விகளுக்குப் பின் நன்றாகவே மாறியிருக்கிறது.

Getty Images இரு வாரங்கள் முன்பு தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இப்போது உலக சாம்பியன் ஆகியிருக்கிறது

"ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இறுதிப் போட்டியில் ஹர்மனிடம் நன்றாகத் தெரிந்தது" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

அந்தத் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி தங்கள் தவறுகளை ஏற்றுத் திருத்திக் கொண்டதும், சீனியர் வீராங்கனைகள் பொறுப்புகளை தங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டது இந்த மாற்றத்தின் மிக முக்கியமாகக் காரணமாக விளங்கியது என்று கருதுகிறார் ஆர்த்தி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.