உலகக் கோப்பை வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்; மக்கள் கொண்டாட்டம்; குவியும் வாழ்த்துகள்! Dhinasari Tamil %name%
ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி முதல் உலககோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வென்றதால், மைதானத்தில் இந்திய அணியின் வீராங்கனைகள், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
இந்திய மகளிர் அணி முதன்முறையாக ஐசிசி உலகக் கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. ஷைபாலி வர்மா (87), தீப்தி சர்மாவின் (58 ரன், 5 விக்கெட்) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இறுதிப் போட்டியில் 52 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி வரை முன்னேறிய தென் ஆப்ரிக்கா துரதிர்ஷ்ட வசமாக தோல்வியைத் தழுவியது.
இந்தியா மற்றூம் இலங்கையில் பெண்களுக்கான ஐ.சி.சி., உலகக் கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் போட்டிகள் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டி, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. மழையால் போட்டி 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. எனினும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. இந்நிலையில், ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா ஜோடி சிறப்பான தொடக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது டிரையான் பந்தில் ஸ்மிருதி (45) ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஷைபாலி, 49 பந்தில் அரைசதம் எட்டினார். ஷைபாலி (87 ரன், 2 சிக்ஸ், 7 ஃபோர்) கைகொடுத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) ஆகியோர் பெரிதும் ஆடவில்லை. எனினும் மறுமுனையில் அசத்திய தீப்தி சர்மா, அரைசதத்தைக் கடந்தார். ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்க்க, கடைசி பந்தில் தீப்தி 58 ரன் எடுத்திருந்த நிலையில் ‘ரன்-அவுட்’ ஆனார். இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 298 ரன் எடுத்தது.
கொடுக்கப்பட்ட இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணியில் தஸ்னிம் பிரிட்ஸ் (23), சுனே லஸ் (25) பெரிதும் கைகொடுக்கவில்லை. மரிஜான்னே காப் (4), சினாலோ ஜப்தா (16) என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்க அணி 148 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. எனினும் மறு முனையில் கேப்டன் லாரா வால்வார்ட் அபாரமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த டெர்க்சன் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்க, ஆறாவது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த நிலையில், தீப்தி சர்மா பந்தில் டெர்க்சன் (35) போல்டானார். கேப்டன் லாரா ஒருநாள் போட்டியில் தனது 11வது சதத்தை அடித்தார். எனினும் அவர் தீப்தி சர்மாவின் பந்தில் 101 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. டிரையான் (9), நாடின் டி கிளார்க் (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்ரிக்க அணி 45.3 ஓவரில், 246 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தீபதி சர்மா 5 விக்கெட் எடுத்து ஜொலித்தார்.
போட்டி தொடங்கும் முன், இந்திய அணி வீராங்கனைகள் அணிவகுத்து நிற்க, பாடகி சுனிதி சௌகான் தேசிய கீதம் பாடினார். 2024 ‘டி-20’ உலகக் கோப்பைவென்று தந்த அன்றைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா போட்டியைக் காண வந்திருந்தார். அதுபோல், இந்தப் போட்டியைக் காண சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களும் வந்திருந்தனர். அவரே தொடக்கத்தில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் உலகக் கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வந்தார்.
இந்தியாவின் ஹர்மன்பிரீத் கௌர், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) ‘நாக்-அவுட்’ போட்டியில் அதிக ரன் குவித்தவர் ஆனார். இதுவரை 4 இன்னிங்சில், 331 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (330 ரன், 6 இன்னிங்ஸ்) உள்ளார்.
உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 39.50 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவுக்கு ரூ. 19.50 கோடி பரிசு கிடைத்தது. பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 125 கோடி பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில், கபில்தேவ் கடந்த 1983ல் இந்திய ஆண்கள் அணிக்கு முதன்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். பின்னர், எம்.எஸ்.தோனி 2007ல் ‘டி-20’ 2011ல் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஷிப் ட்ராஃபி பெற்றுத் தந்தார். பின்னர் ரோகித் சர்மா 2024ல் ‘டி-20’ உலகக் கோப்பை வென்றார். தற்போது மகளிர் கிரிக்கெட்டில் சாதித்துள்ள இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கௌர் கேப்டனாக கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து:ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் மிகுந்த திறமை மற்றும் நம்பிக்கையால் குறிக்கப்பட்டது. போட்டி முழுவதும் அணி விதிவிலக்கான குழுப்பணி மற்றும் விடாமுயற்சியைக் காட்டியது. எங்கள் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வரலாற்று வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும் – என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் கோப்பை வென்றதை அடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர். சமூகத் தளங்களில் பெரும் ஆதரவுடன் தங்கள் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியான தகவல்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
குருவுக்குக் காணிக்கைகோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன், தங்கள் பயிற்சியாளரான குருவின் காலில் விழுந்து வணங்கி, அணியாக, தங்களது வெற்றிக் கோப்பையைக் காணிக்கை ஆக்கினர்.
இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜும்தார். இமயம் அளவுக்கு உயர
இவ்வளவு திறமைகள் இருந்தும் இப்படியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆளா என்று பலரும் வியந்த மனிதர். 1990களில் துவங்கி 2000களிலும் அதிகம் புகழப்பட்டவர்.
தனது முதலாவது ரஞ்சி டிராபி போட்டியில், ஹரியானா அணிக்கு எதிராக பாம்பே அணி சார்பில் 260 ரன்கள் குவித்து உலக சாதனையுடன் 1994ல் கிரிக்கெட்டில் அதிரடி எண்ட்ரி கொடுத்தவர். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் மலை அளவுக்கு ரன்கள் குவித்தவர். “புதிய டெண்டுல்கர்”… “அடுத்த சச்சின்”… என்று புகழப்பட்டார். எனினும் இந்திய அணியில் இடம்பெறாமலே இருந்தது இவரது பெயர்.
2013 வரை இந்திய ஃபர்ஸ்ட் கிளாஸ் டொமாஸ்டிக் கிரிக்கெட்டில் 171 போட்டிகள் விளையாடி, 48.13 ஆவரேஜில், 11,167 ரன்கள் குவித்தார். இதில் 30 செஞ்சுரி 60 பிஃப்டி அடித்திருக்கிறார். இவர்தான் இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற சாம்பியன்களான இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர்! கடந்த 2 வருடங்களாக இந்திய அணியினரை பட்டை தீட்டிய அமோல் மஜும்தார் இன்னொரு செயலையும் செய்தார். அது இப்போது பாராட்டப்பட்டு வருகிறது.
லீக் மேட்ச்களில் அதிரடியாக ரன்கள் குவித்த ஓபனிங் பேட்டர் பிரதிகா ராவல் காயம் அடைய, அவரால் நடக்கவே முடியாது என்ற நிலை. அரை இறுதிப் போட்டிக்கு முன்பு திடீர் என ஏற்பட்ட இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சாதாரணமாக இந்தப் போட்டிகளை வீட்டில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டு இருந்த ஷிஃபாலி வர்மாவை அழைத்து வந்து, நேராக அரை இறுதியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கினார். முதல் போட்டியில் அவர் 10 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மனம் தளராமல் நம்பிக்கை வைத்து அவரையே இறுதிப் போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராகக் இறக்கினார். 78 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தி, தன் மீது பயிற்சியாளர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார் ஷிஃபாலி வர்மா. இப்போது பயிற்சியாளர் அமோல் மஜும்தாருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உலகக் கோப்பை வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்; மக்கள் கொண்டாட்டம்; குவியும் வாழ்த்துகள்! News First Appeared in Dhinasari Tamil