கோவையைச் சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் வைஷ்ணவி (20), தான் முன்பு நிர்வாகியாக இருந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) குறித்தும், அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் த.வெ.க. தலைவர் விஜய்யைச் சந்தித்தது தொடர்பான ஏ.ஐ. வீடியோ ஒன்றை வைஷ்ணவி வெளியிட்டது, த.வெ.க. தொண்டர்களிடையே கடும் விமரிசனங்களை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இன்ஸ்டாகிராம் பிரபலமான கார்த்திக் என்பவர், வைஷ்ணவியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சர்ச்சைக்குரிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து வைஷ்ணவி அளித்த புகாரின் பேரில், கார்த்திக் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.