இந்திய முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான், தற்போது அதிரடி ஃபார்மில் இருக்கும் இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தில் உள்ள ஒரு பெரிய பலவீனத்தைச் சுட்டிக்காட்டி, அதை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் (Player of the Series) விருது வென்ற அபிஷேக் சர்மா, எப்போதும் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அபிஷேக் சர்மாவின் இந்த ஆட்டம், டி20 தரவரிசையில் அவரைச் சரித்திரத்திலேயே அதிக ரேட்டிங் பெற்ற பேட்ஸ்மேனாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது யூடியூப் சேனலில் பேசிய இர்ஃபான் பதான், “அபிஷேக் சர்மா எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக ஆரம்பத்திலேயே ஸ்டெப்-அவுட் (Step-out) செய்து ஆடுவது சரியான அணுகுமுறை அல்ல” என்று குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து, “ஒவ்வொரு முறையும் அவர் ஸ்டெப்-அவுட் செய்து ஆடினால், எதிரணிகள் எளிதில் அவரை அவுட் செய்யத் திட்டங்களைத் தீட்டுவார்கள்.” என்றும் எச்சரித்தார்.
எனவே, அவர் பந்துவீச்சாளர்களைப் ‘பார்த்துத் தேர்வு செய்து’ ஸ்டெப்-அவுட் ஆக வேண்டும் என்றும், அணி நிர்வாகமும், அவரது வழிகாட்டியான யுவராஜ் சிங்கும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இர்ஃபான் பதான் வலியுறுத்தினார். மேலும், சுப்மன் கில்லின் ஆட்டத்தையும் பாராட்டிய அவர், கில் தனது ‘டைமிங்கை’ நம்பி ஆடும் டெம்ப்ளேட்டைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.