உலகமே ஆர்வத்துடன் பார்க்கும் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் 2026-ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஏலம், வரும் டிசம்பர் 15-ஆம் தேதி இந்தியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம், ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக வீரர்களை பரிமாற்றம் செய்வது குறித்த பரபரப்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
கடந்த இரண்டு ஏலங்கள் துபாய் மற்றும் ஜித்தாவில் நடைபெற்ற நிலையில், 2026 ஏலம் இந்தியாவில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் வெளியாகவில்லை.
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக, நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும். முதல் முறையாக நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் மெகா ஏலம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து WPL அணிகளும் ஏற்கெனவே நவம்பர் 6-ஆம் தேதிக்குள் தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுவிட்டன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே சஞ்சு சாம்சனை உள்ளடக்கிய ஒரு பெரிய பரிமாற்ற ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு விற்க தயாராக உள்ளது. ஆனால், அதற்கு பதிலாக, ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே இடம் இருந்து, இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஆகிய இருவரையும் கேட்டுள்ளது.
ஜடேஜா, ஐபிஎல்-லின் முதல் சில சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். 2012 முதல் அவர் சிஎஸ்கேவுடன் இணைந்துள்ளார். கடந்த மெகா ஏலத்தின்போது ஜடேஜாவை சிஎஸ்கே ரூ. 18 கோடிக்கு தக்க வைத்தது. டெவால்ட் பிரெவிஸ், ஐபிஎல் 2025 சீசனின் நடுவில் குர்ஜப்நீத் சிங்குக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் இணைந்தார்.
ஜடேஜாவும், சாம்சனும் தலா ரூ. 18 கோடி மதிப்புள்ள வீரர்கள் ஆவர். இதனால், இருவரும் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், ட்ரேட் ஒப்பந்தத்தில் டெவால்ட் பிரெவிஸையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வலியுறுத்தி வருகிறது. பிரெவிஸ் கடந்த சீசன் நடுவில் சிஎஸ்கே அணிக்கு வந்தபோதிலும், உலகளாவிய பிரான்சைஸ் சர்க்யூட்டில் அவர் இப்போது சிறந்த பேட்டர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
சாம்சனை தக்கவைக்க ராஜஸ்தான் எவ்வளவு பணம் செலவிட்டதோ, அதே தொகைக்கு தக்கவைக்கப்பட்ட ஜடேஜாவை தவிர, வேறொரு வீரரை கொடுக்க சிஎஸ்கே ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. பிரெவிஸை ட்ரேட் டீலில் சேர்ப்பதுதான் இந்த ஒப்பந்தத்திற்கு தடையாக உள்ளது. இன்னும் ஏலத்திற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva