ஹெச்-1பி விசா: அமெரிக்காவின் புதிய முடிவு இந்தியர்களை அதிகம் பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?
BBC Tamil November 10, 2025 08:48 PM
AFP via Getty Images கோப்புப் படம்

அமெரிக்கா சமீபத்தில் ஹெச்-1பி விசா விதிகளை மாற்றியுள்ளது. அதன்படி ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணை அமெரிக்காவில் வேலை செய்வது இனிமேல் கடினமாகிவிடும்.

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணை அங்கு பணி செய்வதற்கான அனுமதி, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தானாகவே நீட்டிக்கப்பட்டு வந்தது. ஜோ பைடன் காலத்தில் வழங்கப்பட்ட இந்த பணி அனுமதி நீட்டிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் ஹெச்-1பி விசா கட்டணத்தை சில ஆயிரம் டாலரில் இருந்து ஒரு லட்சம் டாலராக உயர்த்தினார். அதற்குப் பிறகு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைப் பாதிக்கக் கூடிய இரண்டாவது முடிவாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய முடிவு என்ன? எந்த சூழ்நிலையில் இது எடுக்கப்பட்டது? அது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

புதிய மாற்றங்கள் என்ன? Getty Images கோப்புப் படம்

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கைத் துணை, வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்தின் (Employment Authorization Document, EAD ஈஏடி) உதவியுடன் வேலை செய்யலாம். இந்த ஆவணம் புதுப்பிக்கப்பட வேண்டியவர்களுக்கு இனி தானாகவே நீட்டிப்பு கிடைக்காது.

இந்த புதிய விதி குறிப்பாக ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் (H4 EAD வைத்திருப்பவர்கள்) வாழ்க்கைத் துணைவர்களில் சில வகையைச் சேர்ந்தவர்களை பாதிக்கும். அதுமட்டுமல்ல, எல்1 விசா வைத்திருப்பவர்களைச் சார்ந்திருப்பவர்களும், எஃப்1 விசாக்களில் அமெரிக்காவில் இருக்கும் மாணவர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஹெச்4 ஈஏடி (H4 EAD) என்பது சில வகையான ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைக்கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணமாகும், இது அவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கிறது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் அறிவிப்புப் படி கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த பணி அனுமதி தேவையில்லை, எனவே இந்த மாற்றத்தால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

2025 அக்டோபர் 30-க்கு முன்பு தானாகவே வேலைவாய்ப்பு ஆவணம் நீட்டிக்கப்பட்டவர்கள் இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அது கூறுகிறது.

ஹிந்து பிசினஸ்லைன் செய்தியின்படி, ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, குறிப்பிட்ட வகை வெளிநாட்டினர் தங்களின் பணி அனுமதி காலாவதியான பிறகும் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சரியான நேரத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது ஒரே நிபந்தனையாக இருந்தது.

பைடன் பதவிக் காலத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரின் பணி அனுமதி காலாவதியாகும் போது, புதுப்பித்தல் விண்ணப்பம் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டால் குடியேறியவர், பணி அனுமதி காலாவதியான பிறகும் 540 நாட்கள் வரை அமெரிக்காவில் வேலை செய்ய முடியும்.

வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் யாருக்கு தேவை? Getty Images அமெரிக்க அதிபர் டிரம்ப் (கோப்புப் படம்)

அமெரிக்காவில் பணிபுரிய சிறப்பு விசா இல்லாதவர்கள் வேலை செய்ய இந்த ஆவணம் தேவைப்படுகிறது. சர்வதேச அமைப்புகளில் பணியாற்றுபவர்களைச் சார்ந்திருப்பவர்கள், அகதிகள் மற்றும் மாணவர்கள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் (EAD) தேவை.

அதேபோல், ஹெச்-1பி பணியாளர்களின் வாழ்க்கைத் துணைக்கும், நிறுவனத்திற்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்ட எல்-1 விசாதாரரின் வாழ்க்கைத் துணைக்கும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் தேவை.

அமெரிக்காவில் எஃப்-1 விசாவில் படித்து விருப்ப செய்முறை பயிற்சி (OPT) பெற விரும்பும் மாணவர்களும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) படிக்கும் மாணவர்களும் 24 மாத கால நீட்டிப்பிற்கு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணம் பெற விண்ணப்பிக்கலாம்.

Getty Images கோப்புப் படம் விதிகளில் மாற்றம் செய்ய என்ன காரணம்?

வேலைவாய்ப்பு ஆவண விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) இயக்குநர் ஜோசப் அட்லோவ் விளக்கினார்.

"அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக முந்தைய நிர்வாகங்களின் கொள்கைகளில் சில ரத்து செய்யப்படுகின்றன. எந்தவொரு வெளிநாட்டினருக்கும் வேலைவாய்ப்பு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு போதுமான அளவு பரிசோதனை அவசியம்," என்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்காவில் வேலை செய்வது உரிமை அல்ல, அது ஒரு சலுகை என்பதை ஒவ்வொரு வெளிநாட்டவரும் நினைவில் கொள்ள வேண்டும்," என அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு ஏன் பாதிப்பு அதிகம்?

வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கான விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படுவதற்கு பெரும்பாலும் 7 முதல் 10 மாதங்கள் வரை ஆகும் என்கிற நிலையில் அமெரிக்க அரசின் முடிவால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், பல இந்தியர்கள் வேலை இழக்க நேரிடும்.

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் 2022-ஆம் ஆண்டின் தரவுகளின்படி , அமெரிக்காவில் சுமார் 48 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் வசித்தனர், அவர்களில் 66% பேர் குடியேறியவர்கள், 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை தற்போது 52 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களில் 70 சதவீதத்தினர் இந்தியர் எனும் நிலையில், வாழ்க்கைத் துணையின் வேலைவாய்ப்பு அனுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அவர்களை மிகவும் பாதிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.