பாகிஸ்தான் அணி, ஹாங்காங் சிக்ஸஸ் கோப்பையை வென்றதற்கு அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தேசிய விடுமுறையை அறிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கடந்த ஒரு சாகாப்தமாக (2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைத் தவிர) எந்த ஒரு பெரிய கோப்பையையும் வெல்லாத பாகிஸ்தானுக்கு இது ஒரு பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், ஹாங்காங் சிக்ஸஸ் போன்ற ஒரு போட்டிக்காகப் பிரதமர் விடுமுறை அறிவிப்பதா என்ற கேள்வியும் எழுந்தது.
உண்மையில், “ஹாங்காங் சூப்பர் சிக்ஸஸ் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். இந்திய வர்ணனையாளர்கள் XI-ஐ எங்களால் வெல்ல முடியவில்லை என்றாலும், இந்த வெற்றி உலகக் கோப்பையை வென்றதற்குச் சமம்! இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு வாரத் தேசிய விடுமுறையை அறிவிக்கிறேன்” என்று ஒரு ட்வீட் வெளிவந்த பின்னரே இந்தச் செய்தி காட்டுத் தீ போலப் பரவியது.
“>
ஆனால், இது ஷேபாஸ் ஷெரீப்பின் அதிகாரப்பூர்வ கணக்கு அல்ல, மாறாக ‘ஷாஹ்பெஸ் ஷெரீப்’ என்ற பெயரில் இயங்கும் போலியான கணக்கிலிருந்து வெளியிடப்பட்ட ட்வீட் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் மீம் திருவிழாவாக மாறியது.
இந்தப் போட்டியில் இந்தியாவிடம் மட்டுமே தோற்ற பாகிஸ்தான், குவைத்தை வீழ்த்தி ஆறாவது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.