Bloomberg via Getty Images இந்தியாவின் தரவு மையத் திறன் 2027 ஆம் ஆண்டுக்குள் 77% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சி, தரவு மையங்களின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளது.
தரவு மையங்கள் என்பவை கணினி சேவையகங்கள், தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நெட்வொர்க் சாதனங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, நமது வளர்ந்து வரும் டிஜிட்டல் வாழ்வை இயங்கச் செய்கின்றன.
இவை சாட்ஜிபிடியில் கேட்கப்படும் கேள்விகள் முதல், மின்சார வாகனங்கள், ஸ்ட்ரீமிங் சேவைகள் முதலானவற்றை இயக்குகின்றன.
கடந்த மாதம், கூகுள் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஏஐ தரவு மையத்திற்காக 15 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. இது இந்தியாவில் கூகுள் செய்த மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படுகின்றது.
இதுமட்டுமின்றி, அமேசான் வெப் சர்வீசஸ், மெட்டா போன்ற உலகளாவிய நிறுவனங்களும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற இந்திய நிறுவனங்களும் இந்தியாவின் தரவு மைய சந்தையில் முதலீடு செய்கின்றன. சொகுசு குடியிருப்பு திட்டங்களை உருவாக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளன.
ஜே.எல்.எல் (JLL) என்ற உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் தரவு மையத் திறன் 2027ஆம் ஆண்டுக்குள் 77% அதிகரித்து 1.8 ஜிகாவாட் (GW) ஆக உயரும். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் திறன் விரிவாக்கத்திற்காக 25-30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு தரவு மையங்கள் மிகவும் முக்கியமானவை என்றாலும், இவை அதிக அளவு மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகின்றன. இதனால், இந்தியாவின் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டங்களுக்கு பெரிய சவால்கள் ஏற்படலாம்.
Getty Images உலக மக்கள் தொகையில் 18% பேர் இந்தியாவில் உள்ளனர் இந்தியாவில் ஏன்?
பெரிய தரவு மைய முதலீடுகளை ஈர்ப்பதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகளாவிய தரவு உருவாக்கத்தில் இந்தியா 20% பங்களித்தாலும், உலகளாவிய தரவு மைய திறனில் அது வெறும் 3% மட்டுமே கொண்டுள்ளது. மேலும், அத்தகைய உள்கட்டமைப்புக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. 2028 ஆம் ஆண்டுக்குள், இந்தியா உலகில் அதிக தரவுகளைப் பயன்படுத்தும் நாடாக மாறும் என்றும், இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா போன்ற வளர்ந்த நாடுகளை விட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தரவுப் பயன்பாட்டை அதிகரிக்கும் முக்கிய காரணிகள் பல உள்ளன.
அவற்றுள், இணையம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி, பயனர் தரவை இந்தியாவிலேயே சேமிக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், கணிப்பொறி சக்தி அதிகம் தேவைப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு போன்றவற்றைக் கூறலாம்.
அதேபோல் சாட்ஜிபிடி போன்ற ஏஐ அடிப்படையிலான சாட்பாட்களுக்கு இந்தியா உலகில் இரண்டாவது பெரிய பயனர் தளமாக உள்ளதும் ஒரு காரணமாக உள்ளது.
இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அத்தகைய முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், உலகளாவிய நிறுவனங்கள் அதற்காக நிதியை ஒதுக்குவதற்கும் வலுவான வணிக காரணம் உள்ளது.
கோடக் ஆராய்ச்சியின்படி, "தரவு மையங்களை உருவாக்கும் செலவு இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளது. சீனாவில் மட்டுமே அதைவிட குறைவாக உள்ளது."
மேலும், இந்தியாவின் மின்சாரச் செலவு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு எனத் தெரிய வருகிறது.
இந்தத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் இந்தியா கொண்டுள்ளது.
"90களிலும் 2000களிலும் ஐடி சேவைகளின் வளர்ச்சியை நாம் பயன்படுத்தியதைப் போலவே, இதுவும் நமக்கு சாதகமாகப் பயன்படுத்தக்கூடிய இன்னொரு பெரிய வாய்ப்பு" என்று எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனத்தின் தெற்காசியாவுக்கான இயக்குநர் விபூதி கார்க் பிபிசியிடம் கூறுகிறார்.
Getty Images இணையம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வளர்ச்சியால், இந்தியாவின் தரவுப் பயன்பாடு அதிகரித்துள்ளது. கவலைகள் என்ன?
தரவு மையங்களின் வளர்ச்சி இந்தியாவுக்கு வாய்ப்புகளை அளித்தாலும், கொள்கை வகுப்பாளர்களுக்கு கடினமான சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது.
சிலி, மெக்சிகோ முதல் அமெரிக்காவின் ஜார்ஜியா, ஸ்காட்லாந்து வரை தரவு மையங்கள் குளிரூட்டும் அமைப்புகளுக்காக அதிக அளவு தண்ணீரையும் மின்சாரத்தையும் பயன்படுத்துவதால் உள்ளூர் சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கவலைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மின்சார பற்றாக்குறையும், நீர் பற்றாக்குறையும் உள்ள இந்தியாவில் இந்தப் பிரச்னைகள் இன்னும் தீவிரமாக உள்ளன.
உலக வங்கியின் கூற்றுப்படி, உலக மக்கள் தொகையில் 18% பேர் இந்தியாவில் இருந்தாலும், உலகின் நீர்வளத்தில் 4% மட்டுமே இந்தியாவுக்கு உள்ளது. இதனால் இந்தியா உலகின் மிகுந்த நீர் நெருக்கடி உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது.
இந்தியாவின் தரவு மையங்களின் நீர் பயன்பாடு 2025ஆம் ஆண்டில் 150 பில்லியன் லிட்டரிலிருந்து 2030ஆம் ஆண்டில் 358 பில்லியன் லிட்டராக இரு மடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பெரும்பாலான தரவு மையங்கள் மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அமைந்துள்ளன. இந்த நகரங்களில் ஏற்கனவே நீர் தேவை உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் நீர் நெருக்கடியின் விளைவாக, உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுவது அல்லது இத்தகைய மையங்களை அமைப்பதற்கும், இயக்குவதற்கும் தேவையான உரிமங்களை இழப்பது போன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் இந்தத் துறையை கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கனவே சில அதிருப்தி குரல்களும் எழத் தொடங்கியுள்ளன.
மனித உரிமைகள் மன்றம் (Human Rights Forum) உள்ளிட்ட அமைப்புகள், கூகுள் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள தரவு மையத்திற்காக, அம்மாநில அரசு "பொது வளங்களை திசை திருப்புகிறது" என "எச்சரித்துள்ளன".
இந்த மையம் அமைக்கப்படவுள்ள விசாகப்பட்டினம் நகரம் ஏற்கனவே கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த முதலீட்டின் விளைவாக அந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
கூகுள், பிபிசிக்கு அளித்த ஆவணத்தில், அந்நிறுவனம் புதிய தளங்களில் உள்ளூர் நீர்நிலை அபாயத்தை மதிப்பிடுவதற்கு "சக மதிப்பாய்வு செய்யப்பட்ட சூழல் அடிப்படையிலான நீர்-ஆபத்து கட்டமைப்பை (peer-reviewed context-based water-risk framework)" பயன்படுத்துவதாகவும், இதன் அடிப்படையில் நன்னீர் ஆதாரத்தைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா என தீர்மானிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியா தரவு பாதுகாப்பு, தரவு மைய மேம்பாடு, மண்டல ஒழுங்கு மற்றும் மின்சார பயன்பாட்டுக்கான வெளிப்படையான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும், "இந்த கொள்கைகள் எதிலும் நீர் பயன்பாடு முக்கிய இடம் பெறவில்லை. இது இந்த மையங்களின் நீண்டகால செயல்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய குறைபாடாகும்," என்று உலக வள நிறுவனத்தை (இந்தியா) சார்ந்த சஹானா கோஸ்வாமி பிபிசியிடம் கூறினார்.
குறைந்த நீர்வளத்தால், இந்தியாவின் 60-80% தரவு மையங்கள் இந்த தசாப்தத்தில் அதிக நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று எஸ்&பி குளோபல் ஆய்வு கணித்துள்ளது.
இது, மற்ற தொழில்களிலும் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
"கோடைக் காலத்தில் இந்தத் தரவு மையங்களை குளிர்விக்கத் தேவையான தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டால், வங்கி சேவைகள், கிளவுட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மருத்துவமனைகள், போக்குவரத்து அமைப்புகள் போன்றவை எப்படி பாதிக்கப்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்கிறார் கோஸ்வாமி.
எனவே, நிறுவனங்கள் இந்த குறைவான நீர் வளத்திற்காக போட்டியிடுவதற்குப் பதிலாக, சுத்திகரிக்கப்பட்ட வீடு மற்றும் தொழிற்சாலை கழிவுநீரைப் பயன்படுத்துவதற்கான புதுமையான வழிகளை ஆராய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் (IISc) நீர் மறுசுழற்சி நிபுணர் பிரவீன் ராமமூர்த்தியும் இதே கருத்தை முன்வைக்கிறார்.
"குளிரூட்டும் தேவைகளுக்கு குடிக்க முடியாத அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
மேலும், இந்தியா "புதிய திட்டங்களுக்கு குறைவான நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
அதேபோல், உலகளவில் முன்னேறி வரும் தண்ணீர் இல்லாமல் இயங்கக்கூடிய குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் (zero-water cooling technologies) இந்தியாவிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார் அவர்.
Bloomberg via Getty Images இந்தியாவின் பெரும்பாலான தரவு மையங்கள் மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 'உறுதி செய்ய வேண்டும்'
தண்ணீரைத் தவிர, தரவு மையங்களின் மின்சாரப் பயன்பாடு மற்றொரு முக்கியமான பிரச்னையாக உள்ளது.
சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) கூற்றுப்படி, இந்தியாவில் தரவு மையங்களின் மின்சார பயன்பாடு, நாட்டின் மொத்த மின் தேவையில் 0.5-1% இலிருந்து 1-2% ஆக இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தற்போது தரவு மையங்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதிமுறைகள் இல்லை. இதனால் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின்சார பயன்பாடு அதிகரிக்கலாம்," என்கிறார் கார்க்.
இந்தியாவின் பல தரவு மையங்கள், தங்களின் கார்பன் தடயத்தை குறைப்பதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
ஆனால், "தூய்மையான ஆற்றலைப் பயன்படுத்துவது சட்டபூர்வமாக கட்டாயமாக்கப்பட வேண்டும். இது வளர்ச்சியை மேலும் நிலையானதாக மாற்றும்," என்கிறார் கார்க்.
இந்தியா தனது எதிர்கால டிஜிட்டல் இலக்குகளை வேகப்படுத்தும்போது, சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நுட்பமான கொள்கை சமநிலையையும் உருவாக்க வேண்டும்.
"ஒரு நன்மைக்காக மற்றொரு நன்மையை தியாகம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என கார்க் வலியுறுத்துகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு