பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமீர் அன்சாரி, குஜராத்தின் அகமதாபாத் சர்கேஜ் பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். அங்கு ரூபி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து இரு குழந்தைகளைப் பெற்றனர். ஆனால், ரூபிக்கு அதே ஊரைச் சேர்ந்த வகேலாவுடன் கள்ளத்தொடர்பு உருவானது.
இது அன்சாரிக்குத் தெரிய வந்ததும், மனைவியைத் தாக்கியதால் ஆத்திரமடைந்த ரூபி, கணவனை அழித்தொழிக்க முடிவு செய்தார். இதற்கு வகேலா, அவரது உறவினர்கள் ரஹீம், மோசின் ஆகியோரை இணைத்துக்கொண்டு சதித் திட்டம் தீட்டினர். வீட்டுக்குள் நுழைந்த மூவரும் ரூபியின் உதவியுடன் அன்சாரியின் கழுத்தை அறுத்துக் கொன்று, உடலை சமையலறையில் குழி தோண்டி புதைத்தனர்.
அடையாளங்கள் மறைய டைல்ஸ் பதித்து மூடினர். இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பின் ரூபி அந்த வீட்டில் மாதங்களாகத் தங்கியிருந்து, பின்னர் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தார்.
இச்சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆன நிலையில், வீடு பூட்டியிருப்பதைக் கண்ட உள்ளூர்வாசி சந்தேகப்பட்டு போலீசாரிடம் புகார் அளித்தார். அன்சாரியை நீண்ட காலமாகக் காணவில்லை எனத் தெரிவித்ததால் விசாரணை தொடங்கியது.
இதில் வகேலா சிக்கியதும், வாக்குமூலத்தில் ரூபியுடன் சேர்ந்து செய்த கொலை ரகசியத்தை வெளியிட்டார். போலீசார் வீட்டை உடைத்து சமையலறையைத் தோண்டி எலும்புக்கூடுகளை வெளியெடுத்து, சோதனைக்கு அனுப்பினர்.
இதனை உணர்ந்த ரூபி, ரஹீம், மோசின் ஆகியோர் தப்பியோடி தலைமறைவாகினர். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கள்ளக்காதல் சதி சமூகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.