புது டெல்லியைச் சேர்ந்த 32 வயது நபரிடம், தன்னை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) தலைவர் எனக் கூறிக்கொண்ட ஒரு நபர், புல்வாமா தாக்குதலில் (2019) இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, ₹9 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்துள்ளார்.
கரேன் பாக் பகுதியைச் சேர்ந்த அந்த நபருக்கு ஆகஸ்ட் 13 அன்று, பல அறியப்படாத எண்களிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன. அழைப்பாளர்கள், காஷ்மீரில் பாதிக்கப்பட்டவரின் பெயரில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கில் ₹50 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கணக்கு இவரது அடையாள ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அச்சுறுத்தியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை யாரிடமும் கூறாமல் ரகசியமாக (secret) வைக்குமாறு எச்சரித்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல், பாதிக்கப்பட்டவரை தனது கேமராவை ஆன் செய்யும்படியும், அறையைப் பூட்டிக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி, அவரிடம் “விசாரணை” நடத்தி, அவரது வங்கிக் கணக்கு விவரங்களைச் சேகரித்துள்ளனர். பின்னர், தங்களை ஏடிஎஸ் தலைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மற்றொரு நபருடன் இணைத்துள்ளனர். அச்சமடைந்த பாதிக்கப்பட்டவர், “சட்டப்பூர்வ நிதி பரிமாற்றம் (fund legalisation)” என்று கூறி அவர்கள் குறிப்பிட்ட RBI அங்கீகரிக்கப்பட்ட கணக்கிற்கு RTGS மூலம் ₹8.9 லட்சத்தையும், ஆன்லைன் மூலம் ₹77,000-த்தையும் அனுப்பியுள்ளார்.
மொத்தமாக ₹9,67,000 இழந்த பிறகு, அந்த கும்பல் மேலும் ₹4 லட்சம் பிணைத் தொகை கேட்டு மிரட்டியபோது, பணம் கொடுக்க மறுத்துள்ளார். அதன் பிறகு அழைப்பாளர்கள் தொடர்பைத் துண்டித்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, மோசடி செய்தவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.