கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தாண்டு மே மாதம் 'ரெட்ரோ' திரைப்படம் வெளியாகியிருந்தது.
தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ்.
பாலிவுட்டில், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட பல முக்கியமான திரைப்படங்களைத் தயாரித்த சிக்யா தயாரிப்பு நிறுவனம் கார்த்திக் சுப்புராஜின் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
The Elephant Whisperers
சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தைத் தயாரித்ததும் இந்தத் தயாரிப்பு நிறுவனம்தான்.
இத்திரைப்படம் குறித்து சிக்யா நிறுவனத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இத்திரைப்படம் தொடர்பாக வெரைட்டி ஊடகத்திடம் பேசியிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் குனீத் மோங்கா, "சிக்யாவில், எப்போதும் உள்ளூர் குரல்களை வளர்ப்பதிலும், பல கலாச்சாரங்களுக்கு செல்லக்கூடிய துணிச்சலான உள்ளூர் கதைகளைச் சொல்வதிலும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்தப் பயணத்தில் கார்த்திக்குடன் இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், " சிக்யா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களை எப்போதும் நான் ரசித்திருக்கிறேன்.
அது நான் எப்போதும் எடுக்க விரும்பும் விஷயங்களுடன் அவர்களின் சினிமா ஒத்துப் போகிறது. அர்த்தமுள்ள மற்றும் விருதுகளை வென்ற திரைப்படங்களை உருவாக்கிய தயாரிப்பாளர்கள் குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே தனிச்சிறப்பானது.
நாம் ஒன்றாக இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நாம் உருவாக்கப்போகும் இந்தக் கதை என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது.
அதற்கு சரியான தயாரிப்பாளர்களைக் கண்டறிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்." எனக் கூறியிருக்கிறார்.