தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க.வின் வெற்றிக்காக பல ஆண்டுகளாக உழைத்துவரும் தனியரசு, வேல்முருகன், தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய நால்வரின் நிலைப்பாடு தற்போது ஒரு பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது. இந்த நால்வரும் சமீபத்தில் ஒன்றாக சந்தித்து பேசிய தகவல், தி.மு.க. கூட்டணிக்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் உயர் மட்டத்தில் உள்ள சில சீனியர்கள், வரவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் களமிறங்க வாய்ப்பு தேடும் நோக்கில், கட்சி தலைமைக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியரசு, வேல்முருகன், தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரின் கட்சிகளுக்கு முன்புபோல் தமிழக அரசியலில் பெரிய செல்வாக்கு இல்லை. எனவே, அவர்களுக்கு இடமளிப்பதற்கு பதிலாக, அந்த தொகுதிகளில் தி.மு.க.வே நேரடியாக களமிறங்கி வெற்றி பெற முடியும்,” என்று அவர்கள் தலைமைக்கு ஆலோசனை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட அந்த நால்வரும் உடனடியாக கூடி பேசியுள்ளதாகவும், தி.மு.க.வில் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், தங்களின் அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக, ஒரு மாற்று வியூகத்தை வகுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முதலில், தி.மு.க. கூட்டணியில் எப்படியாவது தங்கள் கட்சிகளுக்கு ஒரு தொகுதியையாவது உறுதி செய்வது என்பதில் உறுதியாக இருப்பது. இதுவே அவர்களின் முதல் இலக்காக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை என்றால், புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உடன் பேசி, அவர்களுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளை ஆராய்வது. ஆனால், விஜய்யின் கட்சி வட்டாரங்கள் இந்த நால்வருக்கும் த.வெ.க.-வில் இடமில்லை என மறைமுகமாக தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்தால், அவர்கள் நான்கு பேரும் அல்லது அவர்களுக்கு ஆதரவாக உள்ள கட்சிகள் இணைந்து தனித்து போட்டியிடும் ‘புரட்சிப் படை’ என்ற ஓர் அணியை அமைப்போம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். இதன் மூலம், தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொண்டு, திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாற்றாக போராட அவர்கள் தயாராகி வருகின்றனர்.
நால்வரின் அரசியல் எதிர்காலம் பெரும்பாலும் தி.மு.க.வின் கூட்டணியில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்தே அமையும் என்று தி.மு.க.வின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினால், அந்த கட்சியால் கிடைக்கும் தொகுதிகளில் இருந்து, இந்த நால்வருக்கும் தலா ஒரு தொகுதி கிடைப்பது உறுதி என்று தி.மு.க. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பு, நால்வருக்கும் ஒரு பெரிய அரசியல் வெற்றியாக அமையும்.
எனவே, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் விலகல் என்ற மிகப்பெரிய மாற்றத்தை சார்ந்துதான் இவர்களின் அரசியல் எதிர்காலம் உள்ளது. காங்கிரஸ் வெளியேறாத பட்சத்தில், இந்த நால்வருக்கும் தங்களுக்கு என்று ஒரு ‘புரட்சிப் படை’ என்ற அணியை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva