டெல்லி செங்கோட்டை அருகில் கார் வெடித்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த கார் வெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவின் தலைநகர், குறிப்பாக அதி உயர் பாதுகாப்புப் பகுதியான செங்கோட்டை பகுதியில் எப்படி அந்த கார் ஊடுருவ முடிந்தது?
இந்த சம்பவம் நடந்து முடியும்வரை உளவுத்துறை என்ன செய்துக்கொண்டிருந்தது? இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? போன்றக் கேள்விகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு
இந்த நிலையில், டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் என்பவரரை அடையாளம் கண்டிருக்கிறது என்.ஐ.ஏ.
இந்த நிலையில், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி பூடான் நாட்டுக்குச் சென்றிருக்கிறார். பிரதமர் மோடியை வரவேற்ற பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே உற்சாக வரவேற்பளித்தார்.
அதைத் தொடர்ந்து, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ``இன்று நான் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன்.
மோடி - பூடான் பிரதமர்
இன்று முழு நாடும் அவர்களுடன் நிற்கிறது. சம்பவம் குறித்து விசாரிக்கும் அனைத்து நிறுவனங்களுடனும் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். இந்த சம்பவத்துக்குப் பின்னணியில் இருக்கும் சதிகாரர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. இந்த சதித்திட்டத்தின் வேரை எங்கள் அமைப்புகள் கண்டுபிடிக்கும். இந்த சம்பவத்துக்குப் பொறுப்பான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்." என்றார்.
``நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்'' - ராஜ்நாத் சிங்