பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள், பாதுகாப்பு காரணங்களால் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் அவர்களை போட்டியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த சில வீரர்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். சில வீரர்கள் நாடு திரும்ப விரும்புவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக 2009 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சில வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக வீரர்களிடம் பேசியதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து அவர்களின் அனைத்து கவலைகளும் நிவர்த்தி செய்யப்படுவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.
இதனால் சுற்றுப்பயணத்திற்குச் செல்லும் ஒவ்வொரு வீரரின் பாதுகாப்பும் நலமும் உறுதி செய்யப்படுகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் என்ன சொன்னது?
Getty Images ராவல்பிண்டியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது இலங்கை கேப்டன் சரித் அசலங்கா.
இலங்கை அணியின் வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் திட்டமிட்டபடி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், "இந்த உத்தரவு இருந்தபோதிலும், ஒரு வீரரோ அணியின் உறுப்பினரோ இலங்கைக்குத் திரும்ப தீர்மானித்தால், சுற்றுப்பயணம் தடையின்றி நடைபெறுவதற்காக, இலங்கை கிரிக்கெட் வாரியம் உடனடியாக மாற்று வீரர்களை அனுப்பும்" என்று வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஒரு வீரரோ, வீரர் குழுவோ அல்லது துணை ஊழியர்களோ இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால், அவர்களின் நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன கூறியது?
Getty Images பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, போட்டிகள் தொடரும் என்றும், போட்டி நடைபெறவிருந்த தேதிகளில் மட்டும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அட்டவணையில் சில மாற்றங்களுடன் தொடர் தொடரும் என்று தெரிவித்ததாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமையன்று ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது, ஆனால் இப்போது வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது போட்டி நவம்பர் 15 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 16 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும்.
முதல் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது, அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த தொடருக்காக இலங்கை 16 வீரர்கள் கொண்ட அணியை அனுப்பியுள்ளது. நம்பகமான வட்டாரங்களின் தகவல்படி, குறைந்தது எட்டு வீரர்கள் கொழும்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என்று பிடிஐ தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வீரர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டர் ஜி-11 பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக உள்ள மொஹ்சின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு