தமிழ்நாட்டில் 16-ந் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதன்படி, வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16-ந் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். 17, 18-ந் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும்.
18, 19-ந் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும் அவர் மேலும் கூறினார். இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து லட்சத்தீவு நோக்கி செல்கிறது. இருப்பினும் கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.
இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை கொடுக்கும் என்றும், இதன் மூலம் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், பெரிய அளவில் வெள்ளப்பாதிப்பு இருக்காது என்றாலும், நீர்நிலைகள் நிரம்பும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதனையடுத்து 3-வது நிகழ்வாக தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அடுத்தடுத்த நிலைகளை கடந்து, புயலாக வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் இருக்கிறது. இது முந்தைய 2 நிகழ்வுகள் நிறைவுபெற்றதும், இந்த புயல் எப்படி இருக்கும்? எங்கு கரையை கடக்கும்? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.