பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் SIR மூலம் நீக்கியதுதேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு பெரிய அளவில் உதவி இருப்பதை தான் தேர்தல் முடிவு காட்டியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சந்தித்து SIR குறித்த புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சண்முகம், “SIR படிவங்கள் பூர்த்தி செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்த புகாரை தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கி உள்ளோம். தமிழகத்தில் 78 சதவீத மக்களுக்கு SIR படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டாக தேர்தல் ஆணையம் தவறான தகவலை தந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கிராம பகுதிகள், பெரும்பாலான மலை கிராமங்களுக்கு படிவங்கள் இன்னும் சென்றடையவில்லை. படிவத்தில் புகைப்படம் ஓட்ட வேண்டியுள்ளது. கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நகர பகுதிக்கு வந்து புகைப்படம் எடுத்து ஓட்டுவது சிரமம். எனவே தேர்தல் ஆணையமே முகாம் அமைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்
இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் உள்ளது. எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் இணையதளம் ஏற்க மறுக்கிறது. இதை தேர்தல் அதிகாரி கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் இரண்டு படிவங்கள் வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் ஒரு படிவம் தான் வழங்குகிறார்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தற்கான acknowledgement ஏதும் வாங்கப்படுவதில்லை. BLO அலுவலர்கள் எப்போது வருவார்கள் என்பது குறித்து மக்களுக்கு முறையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். SIR இல் உள்ள சிக்கல்கள் மற்றும் புகார்களை எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளோம். பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் SIR கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் SIR மூலம் நீக்கியதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு பெரிய அளவில் உதவி இருப்பதை தான் தேர்தல் முடிவு காட்டியுள்ளது. 18 வயது ஆனவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்பது தான் சட்டம், ஆனால் தேர்தல் ஆணையம் எவ்வளவு பேரை நீக்கமுடியுமோ நீக்குவது என்ற முறையில் தான் SIR அமல்படுத்தப்பட்டது. அத்தனைய ஆபத்து தமிழகத்துக்கு வந்துவிட கூடாது என்பதற்காக எதிர்க்கிறோம் அதற்காக தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். பீகார் தேர்தல் முடிவு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. இது அடுத்த 6 மாதம் கழித்து வரவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரதிபலிக்குமா என இப்போது சொல்ல முடியாது" என தெரிவித்தார்.