டெல்லி செங்கோட்டை அருகே 10-ந்தேதி இரவு, மக்கள் நிலைகுலைந்தபடி பார்த்துக்கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் வெடி வெடித்து கார் துண்டுகளாக சிதறியது. சில விநாடிகளில் 13 பேர் உயிரிழந்தனர்; 27 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை.
இந்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கை என தேசிய புலனாய்வு முகமை (NIA) உறுதிப்படுத்தியது.இந்த வெடிப்பின் பின்னணியில் டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் வெடிப்பில் மிக மோசமாக சிதைந்ததால், அவர் உண்மையில் காரை ஓட்டி இருந்தாரா? என்ற கேள்வி எழுந்தது.

இதைத் தீர்க்க, சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட CCTV பதிவுகள், உமரின் அசைவுகளையும், கார் சென்ற வழித்தடங்களையும் தெளிவாக காட்டின. இருப்பினும் சட்டரீதியாக உறுதி செய்ய DNA பரிசோதனையே முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது.உமரின் குடும்பம் வசிக்கும் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் இருந்து அவரது தாய், சகோதரரிடமிருந்து DNA மாதிரிகள் எடுக்கப்பட்டு, டெல்லி AIIMS-க்கு அனுப்பப்பட்டன.
வெடிப்பில் கிடைத்த உடல் பாகங்களுடன் ஒப்பிட்டதில், 100% பொருந்தியது. இதன் மூலம் வெடிப்பை நடத்தியது உமரே என்று உறுதியானது.ஆனால் இந்த ஒரு தாக்குதல் மட்டும் அல்ல.விசாரணையில், இதேபோன்ற நான்கு இடங்களில் கார் வெடிப்பு நடத்தும் அதிர்ச்சி திட்டம் பயங்கரவாதிகளால் அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
உமர் முகமது, முசம்மில் ஷகீல், ஷாகீத் ஷாகீன், அதீல் அகமது ராதர் ஆகியோர் இணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டி வைத்திருந்தனர். அதன் ஒரு பகுதியால் குருகிராம் மற்றும் நுகு பகுதிகளில் இருந்து ரெண்டு டன் அமோனியம் நைட்ரேட் வாங்கியதும் புலனாய்வில் தெரிய வந்தது.
நிதி கையாளுதல் குறித்து உமர் மற்றும் முசம்மில் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டதும் வெளியானது.இந்தத் தகவல்களின் பின்னர், பாதுகாப்புப் படையினர் நேற்று புல்வாமாவில் உள்ள உமரின் வீட்டை வெடிகுண்டு வைத்து முழுமையாக இடித்தழித்தனர். இது சமீபத்திய பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகளின் வீடுகளை தரைமட்டமாக்கிய நடவடிக்கையைக்கூட நினைவுபடுத்துகிறது.