பீஹாரில் மீண்டும் முதல்வராக நிதிஷ் தொடர்வாரா..? அல்லது பாஜ சார்பில் வேறு யாருக்கும் வாய்ப்பு கிடைக்குமா..?
Seithipunal Tamil November 15, 2025 12:48 PM

பீஹார் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி அம்மாநிலத்தில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது.  இந்த தேர்தலில் 20 ஆண்டுகளில் பாஜ அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதாவது, முதல்வர் நிதிஷ் கட்சியை விட பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், பீஹாரின் அடுத்த முதல்வராக நிதிஷ் நீடிப்பாரா அல்லது பாஜ சார்பில் யாரேனும் அமர்த்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பீஹார் தேர்தலில் பாஜ, நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் கூறியதை விட, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட மஹாபந்தன் கூட்டணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த தேர்தல் முடிவை தான் ஒட்டு மொத்த நாடும் உற்று நோக்கியுள்ளது.

ஏனெனில், இந்த முறை பாஜ, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, இமாலய வெற்றிப் பெற்றுள்ளது. மொத்த முள்ள 243 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளமை வரலாற்று சாதனை. இந்த சூழலில் வெற்றியை ருசிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில், யார் அடுத்த முதல்வர் என்பது தான் அடுத்து முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், நிதிஷ் குமார் கட்சியை விட பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. இதனால் முதல்வர் பதவியில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'நிதிஷ்குமார் தான் அடுத்த முதல்வர்' என கூறி வருகின்றனர்.

அத்துடன், மத்திய அரசுக்கு, நிதிஷ் குமார் கட்சி எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்பதால், பீஹார் முதல்வர் பதவியில் மாற்றம் வர வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எனவே, நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பீஹார் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.