திமுக இளைஞரணி நடத்தும் அறிவுத் திருவிழாவில் பாடலாசிரியர் யுகபாரதி ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “யார் தலைவன்?” என்ற கேள்வியைக் கொண்டு தொடங்கிய இந்த உரையில், தெருவில் கூட்டம் போட்டு 41 பேரை கொன்ற சம்பவத்தை எடுத்துக் கூறி, ஒரு தலைவரின் பண்பு, பொறுப்பு, பொறுமை ஆகியவற்றை விளக்கினார். இது கரூர் சம்பவத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
யுகபாரதி தனது உரையில்,“தெருவில் கூட்டம் போட்டு 41 பேரை கொல்லும்வன் தலைவனா?”என்று கேள்வி எழுப்பி, கரூர் நிகழ்வைநேரடியாகப் பெயர் சொல்லாமல் விஜய்யை குறிவைத்து கடுமையாக விமர்சித்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
அண்மையில் திமுக அறிவுத் திருவிழாவில் பல சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்கள் திராவிட கொள்கைகளை விளக்கும் வகையில் பேசி வருகின்றனர். அந்த வரிசையில், யுகபாரதி, சிறந்த தலைவராக யார் தகுதியுடையவர்? என்ற கேள்விக்கு பதிலாக, 1950களில் மாயவரத்தில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தை கூறினார்.
யுகபாரதி அப்போது நடந்த சம்பவத்தைக் குறிப்பிடுகையில் —மாயவரத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்து களைப்புடன் போராடிய ஒரு தன்னார்வலர், மேடையில் அண்ணா அருகில் அமர முடியாத காரணத்தால் விரக்தியடைந்து அண்ணாவையே திட்டியதாக கூறினார். ஆனால் அண்ணா அதைக் கேட்டும் எந்த எதிர்வினையும் காட்டாமல், உரையை சிறப்பாக முடித்து, பின்னர் மேடையில் அமர்ந்தவர்களுக்கு இதை எடுத்துக்காட்டி அந்தத் தொண்டனை பாதுகாக்கும்படி அறிவுறுத்தியதாகவும் பகிர்ந்தார்.
அண்ணா அப்போது,“அவன் என்னை திட்டியதற்காக அவனை யாரும் கண்டிக்கக் கூடாது. கட்சிக்காக உழைக்கும் அந்தப் பையன் என்னைவிடவும் முக்கியமானவன். அவனை நாமே வளர்க்கணும்”என்று கூறியதாக யுகபாரதி தெரிவித்தார்.இதையே எடுத்துக்காட்டாகக் கொண்டு,“15 வருடங்கள் அந்த ஒரே தொண்டனை அண்ணா மெதுவாக வளர்த்தார்; இறுதியில் அவனையே மாயவரம் சட்டமன்ற உறுப்பினராக்கினார். ஒரு தொண்டனை இவ்வளவு பாசத்தோடு உயர்த்துபவர் தான் உண்மையான தலைவர்”,என்று யுகபாரதி விளக்கினார்.யுகபாரதியின் உரை வெளியானவுடன், அது இணையத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆதரவாளர்கள், “இது உண்மையான தலைமைத் தகுதி பற்றிய படிப்பினை” என புகழ்ந்து வருகின்றனர்.தவெக ஆதரவாளர்கள், “கரூர் சம்பவத்தை இழுப்பது அநாவசியம், அரசியல் நோக்கம் தெரிகிறது” என்று எதிர்வினை தெரிவிக்கின்றனர்.எப்படியாயினும்,“யார் தலைவன்?” என்ற யுகபாரதியின் உரை தற்போது தமிழ்நாட்டு அரசியல் சூழலில் மிகுந்த பரபரப்பை உருவாக்கி வருகிறது.