கடலூரில் மிக கனமழை... அவசர எண்கள் அறிவிப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
Dinamaalai November 16, 2025 06:48 PM

கடலூர் மாவட்டத்தில் இன்று நவம்பர் 16ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, நீர்நிலைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் நேரங்களில் திறந்த வெளிகளில் நிற்குதல், மரங்களின் கீழ் தஞ்சம் புகுதல், உலோகக் கட்டமைப்புகளின் அருகில் நிற்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, குடும்ப அட்டை உட்பட முக்கிய ஆவணங்களை நன்கு பாதுகாப்பான நெகிழி உறைகளில் வைத்திருக்க வேண்டும். டார்ச், மருந்துகள், குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் கரைகளிலும் வசிப்போர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைப்பதைத் தவிர்க்கவும், அவற்றை முன்கூட்டியே உயர்ந்த இடங்களுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

பேரிடர் கால நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகம் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்தியுள்ளது. பொதுமக்கள் 1077 மற்றும் 04142-220700 என்ற எண்ணுகளுக்கு அழைத்து மழை, வெள்ளப்பெருக்கு தொடர்பான தகவல்களை வழங்கலாம். பெறப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

மழைக்காலத்தில் நீர் தேங்குதலைத் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை ஆகியவை தூர்வாரும் பணிகளை முடித்துள்ளன. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; தேவையான முன் நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.