மகாராஷ்டிரா மாநிலம், வசை பகுதியில் உள்ள ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 6ஆம் வகுப்பு மாணவி காஜல் கோண்ட் (12), குழந்தைகள் தினத்தன்று பள்ளிக்கு வெறும் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தததற்காகக் கொடுக்கப்பட்ட கொடூரத் தண்டனையால் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாமதமாக வந்ததற்காக ஆசிரியர் மாணவி காஜலுக்கு 100 சிட்-அப்களை தண்டனையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தண்டனை காரணமாக காஜலின் இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது.

தண்டனை வழங்கப்பட்டபோது, மாணவி பள்ளிப் பையைச் சுமந்தபடி சிட்-அப் செய்ததால் வலி அதிகரித்ததாகவும் காஜலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, முதலில் நலாசோபரா மருத்துவமனையிலும், பிறகு மும்பை ஜே.ஜே. மருத்துவமனைக்கும் மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காஜல் உயிரிழந்தார்.
ஆசிரியரின் இந்த மனிதாபிமானமற்ற தண்டனைதான் தனது மகளின் மரணத்திற்குக் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தப் படுகொலைக்கு நீதி கோரிப் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் வரை பள்ளியை மூட வேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் (MNS) தலையிட்டு வலியுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் இதுபோன்ற உடல்ரீதியான தண்டனைகளின் மோசமான விளைவுகளை இந்தச் சோகச் சம்பவம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன், பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.