திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதால், அன்னதானப் பிரசாதம் முக்கிய சேவையாக உள்ளது. தினசரி காலை, மதியம், இரவு என மூன்று நேர அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கான ஒரு நாள் செலவு மட்டும் ரூ.44 லட்சம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒரு நாள் அன்னதானத்தை வழங்க விரும்பும் பக்தர்கள் இந்த முழுத் தொகையையும் நன்கொடையாக செலுத்த வேண்டும். இதனடிப்படையில் நன்கொடையாளரின் பெயர் அன்றைய தினம் அன்னதான அரங்கில் உள்ள டிஜிட்டல் திரையில் காட்டப்படும்.
சமீபத்தில் திமுக மூத்த தலைவர் மற்றும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என்.நேருவின் பெயர் திருப்பதி அன்னதான அரங்கின் டிஜிட்டல் பலகையில் காணப்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகின. இதனால் அவர் ஒரு நாள் அன்னதான செலவான ரூ.44 லட்சத்தை நன்கொடையாக அளித்தார் என செய்திகள் பரவின.
இந்த தகவல் வெளிவந்தவுடன் சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்தன. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை முன்னிறுத்தும் திமுக அமைச்சரால் ஏற்கனவே செல்வச் செழிப்பு பெற்றிருக்கும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இத்தனை தொகை ஏன் வழங்கப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனமிட்டன.
சில நாட்களுக்கு முன் இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு “நான் பணம் கொடுக்கக்கூடாதா? கொடுத்திருந்தால் விமர்சனம் செய்யட்டும். அனைவரும் நல்லவனென்று சொல்ல மாட்டார்கள்” என்று அமைச்சர் நேரு உணர்ச்சிவசப்பட்ட பதில் அளித்தார்.
ஆனால் நேற்று மீண்டும் இதே கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் புதிய விளக்கம் அளித்தார். “நான் திருப்பதி கோயிலுக்கு நன்கொடை கொடுக்கவில்லை. 44 லட்சம் கொடுக்கத்தக்க நிலை எனக்கில்லை. அது என் குடும்பத்தினர் என் பெயரில் செய்த நன்கொடை. எனக்குத் தெரியிருந்தால் நிறுத்திவிட்டிருப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது முதல் பதிலுக்கும், இப்போது அளித்துள்ள விளக்கத்திற்கும் முரண்பாடு இருப்பதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்தும் பேசுபொருளாக மாறியுள்ளது.