காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் என்ன வேலை?– சீமான் அதிரடி பேச்சு!
Seithipunal Tamil November 16, 2025 06:48 PM

தஞ்சையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தண்ணீர் மாநாட்டில் கலந்துகொள்ள திருச்சி வந்த சீமான், செய்தியாளர்களிடம் கடுமையாக பேசியுள்ளார். காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக— யாரையும் விடாமல் அவர் பதிவு செய்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

சீமான் கூறியதாவது:“காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும்.அவர்கள் தோல்வியடைவது எனக்கு மகிழ்ச்சி. காங்கிரஸ் வீழ்வது எனக்கு பெருமையே. காமராஜர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அந்தக் கட்சி சம்பந்தமே இல்லை. இப்போது அது ஒரு கம்பெனி மாதிரி தான் உள்ளது,” என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் தொடர்ந்து,“திராவிட கட்சிகளின் தோளில்தான் காங்கிரஸும், பாஜகவும் ஏறிக் கொண்டு பயணம் செய்கின்றன.
தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு என்ன வேலை? எந்த மாநிலத்திலும் தேசியக் கட்சிகள் தேவையில்லை,” என்று சீமான் வெடித்தார்.

பீகார் தேர்தலில் என்.டி.ஏ பெற்ற வெற்றி கூட SIR நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் காரணமாக இருந்ததாக அவர் கூறினார்.

“திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் அதே அச்சம் உள்ளது. அதை பாஜக ஆதரிக்கிறது; காரணம் அதிமுகவின் எஜமானர் பாஜக தான். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக பேசுகிறதானால், சட்டசபையை உடனே கூட்டி அறிவிக்க வேண்டும்,” என திமுகவையும் அவர் சாடினார்.

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் குறித்து,

“தூய்மைப் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்து, நிரந்தர வேலை தராமல் உணவு கொடுத்து சமாதானப்படுத்துகிறார்கள்,” என சீமான் விமர்சித்தார்.

சீமான் வழக்கம்போல தீவிரமும் நேர்மையாகவும் பேசிய இந்த கருத்துகள், தமிழக அரசியல் சூழலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.