உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிராமம் ஒன்றில், திருமணம் ஆன நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுடன் கள்ள உறவில் இருந்த 35 வயதான சாம்பி என்பவருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், அவர் சாம்பியிடம் கள்ள உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த சாம்பி, தன்னுடன் தொடர்ந்து உறவில் இருக்குமாறு அப்பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மதியம் அந்த இளம்பெண் கிராமத்தில் உள்ள குளத்திற்குச் சென்றபோது, சாம்பி அவரைப் பின் தொடர்ந்தார்.
குளக்கரையில் வைத்து, அந்த இளம்பெண்ணுக்குச் சாம்பி வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அந்தப் பெண், தன்னை நெருங்கி வந்த கள்ளக்காதலன் சாம்பியின் உதட்டைப் பலமாக கடித்துத் துப்பியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் சாம்பியின் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால், அவர் வலியால் அலறித் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், சாம்பியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபரீத சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.