`அம்மா என்னை மன்னித்து விடுங்கள்'- டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குதித்து மாணவர் விபரீதம்
Vikatan November 21, 2025 02:48 AM

டெல்லியில் பிரபல பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், அங்குள்ள ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்து இருப்பதாக அவரது தந்தைக்கு மர்ம நபர் போன் செய்தார். அவரது தந்தை உடனே தனது மகனை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார். மாணவனின் தந்தை மருத்துவமனைக்கு சென்றபோது மாணவன் இறந்திருந்தான். அவன் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருந்தான். அவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில், அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்.

இதற்கு முன்பு எத்தனையோ முறை உங்களது இதயம் உடையும் அளவுக்கு நடந்து கொண்டுள்ளேன். கடைசியாக மீண்டும் அதனை செய்கிறேன்.

இதற்கு காரணம் எனது ஆசிரியர்கள். எனது உடல் உறுப்புகள் பயனளிக்கும் என்றால் தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தனது மூத்த சகோதரனுக்கும் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து தற்கொலை செய்த மாணவனின் தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.

அதில் தனது மகனது தற்கொலைக்கு 3 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாணவன் தந்தை கூறுகையில்,''பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய விதத்தால் எனது மகன் மன அழுத்தத்தில் இருந்து வந்தான். இது தொடர்பாக என்னிடமும், எனது மனைவியிடமும் பல முறை எங்களது மகன் தெரிவித்துள்ளான். 10-ம் வகுப்பு தேர்வு நெருங்கிக்கொண்டிருந்ததால் பிரச்னை வேண்டாம் என்று கருதி இது குறித்து புகார் செய்யாமல் இருந்தோம்.

தேர்வு முடிந்ததும் வேறு பள்ளியில் சேர்ப்பதாக சொல்லி இருந்தோம். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நாடகம் நடந்தபோது எனது மகன் தவறி கீழே விழுந்திருக்கிறான். அதில் அவனுக்கு உதவி செய்யாமல் அளவுக்கு அதிகமாக நடிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு எனது மகனை பள்ளியில் இருந்து வெளியில் அனுப்பி விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அவனை அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கேயே அழுதிருக்கிறான்''என்று கண்ணீருடன் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.