விருதுநகரில் நான்காவது ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு வெம்பக்கோட்டை அகழ்வாராட்சியில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எத்தனையோ விதமான பொருட்கள் தமிழர்களையும், தமிழரின் மரபுகளையும் பறைசாற்றக்கூடிய அளவில் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்படி சுடுமண்ணால் செய்யப்பட்ட பானைகள், தங்கமணிகள் பெண்ணின் உருவ பொம்மை என எத்தனையோ கண்டுபிடிக்கப்பட்டு இதற்கு முன்னர் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அப்போது யாருக்குமே காட்சிப்படுத்தப்படாத நான்கு மிக முக்கிய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பவளத்தாலான மோதிரங்கள்
வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி அரங்கத்தில் அப்படி என்னதான் இருக்கிறது எனப் பார்ப்பதற்குச் சென்றபோது வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியின் இயக்குனர் பொன் பாஸ்கர், அங்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய பொருட்களின் தன்மையையும் அதன் காலகட்டத்தையும் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.
நாமும் அவர் என்ன சொல்கிறார் எனக் குழந்தைகளுடன் ஆர்வமாகக் கவனித்தோம். அப்போது, "இதுவரை எந்த அகழாய்வில் கிடைக்காத சுடுமண்ணால் ஆன குடும்ப தாய் தெய்வ வழிபாட்டு உருவம் இங்குதான் கிடைத்துள்ளது.
தென்னிந்தியாவிலேயே அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ரொம்ப ரேர் பீஸ் இது தான். நம்ம வெம்பக்கோட்டையில 13 குடும்ப தாய் தெய்வ வழிபாட்டு உருவங்கள் கிடைத்திருக்கின்றன. இதற்கு முன் கரூர் அருகில் பொருந்தல் மற்றும் பட்டறைப் பெரும்புதூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. ஆனால் அவை சிறிதளவே வேற உலோகத்தில் கிடைத்தன.
வெம்பக்கோட்டை அகழாய்வு: செப்பு நாணயம், சங்கு வளையல் கண்டுபிடிப்பு - ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!
சங்ககால செங்கற்கள்
இங்கு நமக்கு கிடைத்திருக்கக் கூடியது சுடுமண்ணால் செய்யப்பட்டது மிகவும் அரிதானது. ஏனென்றால் பித்தளையில் நம்ம எப்படி வேணாலும் செய்து கொள்ளலாம். ஏன்னா அதெல்லாம் உலோகங்கள். இந்தக் குடும்ப தாய் தெய்வ உருவம் என்பது தமிழர்கள் தாயை வழிபடக்கூடிய ஒரு தாய்வழி சமூகம் என்பதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.
அடுத்தது தங்கத்தால் ஆன நாணயங்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. இங்கு சிறிதும் பெரிதுமாக 24 செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 8 தங்க அணிகலன் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடக்காய், சுடுமண் பகடக்காய் கூட இங்கு கிடைத்தது.
அதே போல் பவளத்தாலான மோதிரக்கல் இங்கிருந்து எடுக்கப்பட்டது. இந்த மோதிரக் கல்லில் காளையின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதிரக்கல் இங்கு கிடைத்ததால் நமக்கும், வடநாட்டிற்கும், மேலை நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு இருந்ததைச் சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகிறது.
காளையின் முத்திரை பொறிக்கப்பட்ட பவளக்கல்
ஏனென்றால் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில்தான் இது போன்ற கற்கள் கிடைத்திருக்கின்றன. இந்தக் கற்கள் ரோம் நகரத்திலிருந்து கூட வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பெரும் செல்வந்தர்களாக இருந்த அவர்கள் இந்தக் கற்களைக் கொண்டு வந்து இங்கே கொடுத்துவிட்டு பண்டமாற்று முறையாக வெண் சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
சங்ககாலத்தில் பயன்படுத்திய சுடப்பட்ட செங்கல்கள். செங்கல்களுக்கு ஒரு அளவு உள்ளது. உயரம், அகலம், நீளம் விதம் 31 இன்ச், 16 இன்ச், 6 இன்ச் மற்றும் 38 இன்ச், 18 இன்ச், 8 இன்ச் போன்ற அளவுகளில் மட்டும்தான் செங்கற்கள் உள்ளன. இந்த அளவிலேயே இங்கு செங்கற்கள் கிடைத்துள்ளன" என்று மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார்.
அழகன்குளம் அகழாய்வு சொல்லும் உண்மை என்ன?