தலைநகர் டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்புள்ளது என அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக இந்தியா 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பழிவாங்க வேண்டும் என ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியதை உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி டில்லியில் செங்கோட்டையில் சிக்னல் அருகே கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதில் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இருப்பது, ஹமாஸ் பாணியில் டிரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டது உள்ளிட்டவை கண்டுப் பிடிக்கப்பட்டன.
தற்போது டெல்லி தற்கொலைப்படை தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 02 நாட்களுக்கு முன்பு வரை பிரதமராக இருந்த அன்வருள் ஹக் இது குறித்து கூறியதாவது:

இந்தியா, பலுசிஸ்தானில் ரத்தம் ஓடவைத்தால், செங்கோட்டை முதல் காஷ்மீரின் வனப்பகுதி வரை தாக்குதல் நடத்துவோம் என முன்னரே கூறியிருந்தேன். அதனை தற்போது செய்துள்ளோம் என்றும், எங்களின் தைரியமிக்க நபர்கள் அதனை செய்துள்ளதாக கூறி பரபரப்பி ஏற்படுத்தியுள்ளார்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை கண்டித்து அங்கு போராட்டம் நடந்து வருகின்ற நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் எந்த பங்கும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.