மீஞ்சூர் அருகே முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை விரட்டி, விரட்டி வெட்டிய ரவுடி கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (38). ஆட்டோ ஓட்டுநரான பாண்டியன் தமது வீட்டில் புறாக்களையும் வளர்த்து வந்துள்ளார். பாண்டியன் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் ரவுடி கும்பல் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளது. அதனை பாண்டியன் தட்டிக்கேட்ட போது, ரவுடி கும்பல் அவரது வீட்டில் வைத்திருந்த சிசிடிவி கேமராவை அடித்து உடைத்து அங்கிருந்த புறாக்களையும் கழுத்தை அறுத்து வீசி சென்றுள்ளது. இது தொடர்பாக மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக பாண்டியன் அப்பகுதி மக்களிடம் கூறிவந்துள்ளார். இதனை அறிந்த ரவுடி கும்பல் மீண்டும் பாண்டியன் வீட்டிற்கு வந்து பாண்டியனை ஓட ஓட விரட்டி சரமாரியாக தலை, கை, கால், உடலில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த பாண்டியனை மீட்ட உறவினர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பாண்டியன் உறவினர்களுக்கு சொந்தமான நிலம் ஒன்றை அண்மையில் விற்பனை செய்த போது ரவுடிகள் சிலர் தங்களுக்கு மாமுல் தரவேண்டும் என பாண்டியனை மிரட்டி, பணம் கொடுக்க மறுத்ததால் வெற்றியதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். கஞ்சா, மது போதையில் குடியிருப்பு பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பாண்டியன் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல் துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல ரவுடி யுவராஜ் (30), சூறை வேந்தன் (20), கோகுல்ராஜ் (19) ஆகிய மூவரை மீஞ்சூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.