சபரிமலையில் நவ 24 வரை 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்..
Dhinasari Tamil November 21, 2025 12:48 PM

சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி அளிக்க திருவாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.மேலும் இனி உடனடி ஸ்பாட் புக்கிங் நிலக்கல், வண்டிபெரியாரில் மட்டும் செயல்படும். பம்பை எருமேலி செங்கன்னூர் ஸ்பாட் புக்கிங் மையங்கள் தற்போது மூடப்படுவதாக திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை கோயில் நடை திறந்தது முதலே யாரும் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருகிறது. தினமும், ஏராளமானோர் தரிசனத்துக்கு வருவதால் நிலக்கல் பம்பா எருமேலி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது.

கூட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், அதை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி, நவ.24ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி தர முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக 20,000 பேர் வரை ஸ்பாட் புக்கிங்குக்கு அனுமதி தரப்பட்டு இருந்த நிலையில், கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக் கொண்டே செல்வதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல மகரவிளக்கு உற்சவ காலத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டே இருப்பதால், நெரிசலை கையாளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கேரள உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு சபரிமலைக்கு ஒரு நாளைக்கு 5,000 ஸ்பாட் புக்கிங்குகளை மட்டுமே அனுமதிக்கும்.

நிலக்கல் மற்றும் வண்டிப்பெரியாரில் ஸ்பாட் புக்கிங் கிடைக்கும், பம்பா, எருமேலி மற்றும் செங்கனூரில் உள்ள முன்பதிவு மையங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஸ்பாட் புக்கிங்குகளுக்கு நவம்பர் 24 வரை கட்டுப்பாடுகள் இருக்கும்.

சபரிமலையில் கடந்த இரு நாட்களாக ஸ்பாட் புக்கிங் கூடுதலாக பத்தாயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.இதனாலேயே சன்னிதானத்தில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது

சபரிமலையில் நவ 24 வரை 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்.. News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.