ஜோதிமணி குண்டுக்கட்டாக கைது! கரூரில் பரபரப்பு
Top Tamil News November 21, 2025 01:48 PM

கரூர் அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொது மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார்.

கரூர் அருகே வெண்ணைமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 507 ஏக்கர் இனாம் நிலங்கள் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கின்றன. அதில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பெயரில் கோவில் இனாம் நிலங்களில் உள்ள வர்த்தக கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்க இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர், பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் சீல் வைக்காமல் சென்றனர்.  இந்நிலையில் இன்று சின்ன வடுகபட்டிக்கு கண்ணம்மாள் என்பவர் வாடகைக்கு விட்டிருக்கும் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைக்க வருகை தந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணம்மாள் குடும்பத்தினர் 4 பேர் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் அங்கு திரண்டு அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பொதுமக்களுடன் சேர்ந்து எம்.பி ஜோதிமணி,,முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கண்ணம்மாள் என்பவர் வாடகைக்கு விட்டிருக்கும் 23 வீடுகளுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல், பொது மக்களில் ஒரு பகுதியினர் கரூர் - சேலம் (NH 44) தேசிய நெடுஞ்சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் பொதுமக்கள் போராட்டத்தால் போக்குவரத்து முடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட போது மயக்கம் அடைந்த பெண்ணை காவல்துறை வாகன மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாகனங்கள் அரை மணி நேரத்துக்கும் மேலாக சுமார் 1 கி.மீ வரை தூரம் வரை நின்றன. தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கய்யா உத்தரவின் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இரு வேறு இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரும் 4 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.