தவெக நிர்வாகிகள் கோரிக்கை!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்..
Webdunia Tamil November 21, 2025 01:48 PM

தவெக தலைவர் விஜய், கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் பலரும் சிக்கியதில் பரிதாபமாக 41 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்த போது விஜய் அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து விட்டார். அதையும் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார் விஜய். இரண்டு சனிக்கிழமை முடிந்து மூன்றாவது சனிக்கிழமை அவர் கரூருக்கு சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. எனவே விஜய் சுற்றுப்பயணம் அப்படியே நிறுத்தப்பட்டது.

ஒரு மாத காலம் தவெக இயங்கவே இல்லை. அதன்பின் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து விஜய் ஆறுதல் சொன்னபின் தவெக இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின் சிறப்பு பொதுக்குழு கூட்டமும் நடந்தது. அதில் முதல் வேட்பாளராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நீங்கள் மீண்டும் சுற்றுப் பயணத்தை துவங்க வேண்டும் என தவெக நிர்வாகிகள் பலரும் விஜயிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம். குறிப்பாக சேலத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குமாறு அவர்கள் கேட்க விஜயும் சம்மதித்து விட்டார் என செய்திகள் கசிந்துள்ளது. அனேகமாக விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். முக்கியமாக மக்கள் கூடினாலும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் இடத்தை தேர்ந்தெடுத்து போலீசாரின் அனுமதியை தவெக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.